சூரத்:
ஜிஎஸ்டி வரி விதிப்பின் ஓராண்டை மோடி அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. ஆனால், சூரத் நகர ஜவுளி வர்த்தகர்கள்- மோடிக்கு பிடித்த வகையில் பஜ்ஜி விற்று நூதன முறையில் ஜிஎஸ்டி அமலாக்கத்தைக் கொண்டாடியுள்ளனர்.

ஒரே நாடு, ஒரே வரி விதிப்பு முறை என்ற பெயரில், கடந்த 2017 ஜூலை 1-ஆம் தேதி பொது சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. இந்த வரி விதிப்பின் மூலம் நாடே தலைகீழாக மாறப் போகிறது; பாலாறும் தேனாறும் ஓடுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் கூறினர்.ஆனால், இந்த ஓராண்டில் சிறு-குறு தொழில் நடத்தி வந்த பலர் தெருவுக்கு வந்து விட்டனர். பல கோடி பேர் வேலையிழப்புக்கு ஆளாகி வறுமைக்கு ஆட்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி-யால் அந்நிய முதலீடு கொட்டும் என்று கூறியதும் நடக்கவில்லை. உள்நாட்டுத் தொழிலும் வளரவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கம் அடைந்ததுதான் மிச்சம் என்றாகி விட்டது.

தொழில்கள் அழிவதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மோடி அரசோ, ஜிஎஸ்டி மூலம் வரி வருவாய் உயர்ந்து கொண்டே போகிறது என்று பெருமையடித்துக் கொண்டு, தற்போது, ஜிஎஸ்டி அமலாக்கத்தின் வெற்றிகரமான ஓராண்டு என்று விழாவும் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில்தான், ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜவுளி வர்த்தகர்கள், அரசின் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஜ்ஜி தயாரித்து விற்று நூதனப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஜவுளித் தொழில் இன்னும் 6 மாதத்தில் அழிந்து விடும் ஆபத்தில் இருப்பதாக நாங்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும்போது, மோடி அரசு ஜிஎஸ்டி-க்கு விழா கொண்டாடுவதை கொஞ்சமும் ஏற்க முடியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின், சூரத்தில் மட்டும் பல ஜவுளி வர்த்தகர்கள் தங்களின் கடைகளை இழுத்து மூடிவிட்டு சென்றிருக்கும் போது, விழா ஒரு கேடா? என்று சூரத் நகர ஜவுளி வர்த்தகர்களின் தலைவர் ரையின் தாடெட் கொந்தளித்துள்ளார்.ஜிஎஸ்டி-யால் ஜவுளி வர்த்தகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அதனை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் வகையிலேயே பஜ்ஜி விற்கும் போராட்டத்தை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: