சென்னை: சென்னையில் செவ்வாயன்று நடந்த என்கவுண்டரில் ரவுடி ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் திங்களன்று ராயப்பேட்டை பகுதியில் தகராறில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் ராயப்பேட்டை முதல் நிலை காவலர் ராஜவேலு சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தனை கண்டித்தாக கூறப்படுகின்றது. அப்போது ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் காவலர் ராஜவேலுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவத்தால் 16 இடங்களில் வெட்டுக்காயங்களுடன் ராஜவேலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுதொடர்பாக தனிப்படை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சென்னை ஐஐடி பின்புறம் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஆனந்தனை கைது செய்ய முற்பட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் ஆனந்தனை துப்பாக்கியால் சுட்டுள்னர். இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தன் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து ஆனந்தனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Leave a Reply

You must be logged in to post a comment.