வேலூர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்சியர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக எழுதி ஆட்சியரிடம் கொடுத்தனர்.

அதில் நிலப்பட்டா, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வேலை வாய்ப்பு, கடனுதவி, நிதியுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 352 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ராமன், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அரக்கோணம் ஒன்றியம் மோசூர், அன்புநகர் கிராமங்களை சேர்ந்த இருளர் இன மக்கள் ஆட்சியரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், 40 குடும்பங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை சாதிச் சான்று வழங்கவில்லை.இதனால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே சாதிச் சான்று வழங்க வேண்டும். அதேபோல் வீட்டுமனைப் பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் குடியாத்தம்தாலுகா செங்குன்றம் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் நில எடுப்பு செய்யப்பட்டு வீடற்ற 55 பிற்படுத்தப்பட்ட இன மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் பணியின் போது உயிரிழந்த 2 குடும்பத்தினர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணையைர் ஆட்சியர் வழங்கினார். அதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கஜேந்திரன், உதவி ஆணையர்(கலால்) பூங்கொடி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: