கோவை,
கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக சூயஸ் நிறுவனத்துடன் மாநகராட்சி மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் மூலமாக மக்களை ஏமாற்ற அரசு முயற்சிப்பதாக ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செவ்வாயன்று கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், சென்னையில் உதயமாகியிருக்கும் ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி வரவேற்கத்தக்கது. இன்றைய நிலையில் ஊடகத்தின் சுதந்திரமும் கேள்விக்குறியாகி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த அமைப்பு உருவாகியிருப்பது பாராட்டுக்குரியது. எப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க உறுதுணையாக இருக்கும்.

மோடி அரசு அமல்படுத்தி வரும் ஜிஎஸ்டி முறை மிகப்பெரிய சாதனை என்றும், அரசின் வருமானம் அதிகரித்திருக்கிறது என்றும் பிரதமர் பெருமிதம் கொள்கிறார். ஆனால் அமலாக்கத்திற்கு பின்னர் தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கிறது. 5 லட்சம் பேர் வேலையிழந்து இருக்கின்றனர் என்று சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் ஜிஎஸ்டியின் விளைவாக இருக்கிறது. சிறு, குறு தொழில்களை அழித்து வரும் வேலையையும், இருக்கும் வேலைவாய்ப்பை பறிக்கும் வேலையை மோடி அரசு அமல்படுத்தியிருக்கும் ஜிஎஸ்டி செய்து வருகிறது. இதனையே மோடி சாதனையாக குறிப்பிடுகிறார். ஏற்கனவே இந்தியாவில் இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு உயர் கல்வி ஆணையத்தை அமைக்கவிருப்பதாக மோடி அரசு அறிவித்திருக்கிறது. இது உயர் கல்வியை தனியார் மயமாக்கி வியாபாரமாக்கும் முயற்சியே ஆகும். ஏற்கனவே இருந்த பல்கலைக்கழக மானியக்குழு முழுக்க கல்வியாளர்களை கொண்ட அமைப்பாக இருந்து வந்தது. அதில் சில குறைபாடுகள் இருப்பினும் உயர் கல்வியில் அதன் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வருகிறது. சுவிஸ் வங்கியில் தற்போது இந்தியர்களின் கருப்பு பணம் 50 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஆனால் மோடி கறுப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டார். ஆனால் கறுப்பு பணம் குறைவதற்கு மாறாக அதிகரித்திருக்கிறது. இந்த அரசானதுகறுப்பு பண முதலைகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. ஊழலை ஒழிக்க லோக்பால் அமைப்பு கொண்டு வருவோம் என்று கூறிய மோடி அரசு இதுவரை லோக்பால் மசோதா அமைக்கவில்லை. இந்நிலையிலேயே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் இன்னும் லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை என மோடி அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறது. மேலும் லோக்பால் அமைக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என 10 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என தற்போது கெடு விதித்திருக்கிறது.

கோவை குடிநீர் விநியோகம் தனியார் வசம் ஒப்படைப்பு:
கோவையின் ஒட்டுமொத்த குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அரசு தற்போது பல்வேறு விளக்கங்களை தெரிவித்து வருகிறது. ஆனால் இதுவரை மாநகராட்சிக்கும் சூயஸ் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்த விபரங்களை முழுமையாக பத்திரிகைகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை. இந்திய அளவில் மிகப்பெரிய நீரியல் நிபுணர்கள் மற்றும் நீர் பங்கீடு வழங்கல் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இருக்கிறது. இதனை அரசு நிர்வாகமே மேற்கொண்டு செய்திட முடியும். தமிழ்நாடு குடிநீர் வடிவால் வாரியமே பல திட்டங்களை திறன்பட செய்து வருகிறது. இந்நிலையில் ஏன் பன்னாட்டு நிறுவனத்திடம் இந்த பணிகளை ஒப்படைக்க வேண்டும். அதற்கான அவசியம் என்ன ? ஏற்கனவே திருப்பூரில் மூன்றாவது குடிநீர் திட்டம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு அது மிகப்பெரிய தோல்வியை தழுவியிருக்கிறது. இதனால் மக்களின் வரிப்பணம் பல கோடிகள் விரயம் ஆகியிருக்கிறது. இந்நிலையிலேயே தற்போது திருப்பூரில் நான்காம் குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமே செய்து வருகிறது.

இதிலிருந்தாவது தமிழக அரசு படிப்பினை பெற வேண்டாமா ?
சூயஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்கும், தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் விளக்கங்களுக்கும் இடையில் மிகப்பெரிய முரண்பாடு இருந்து வருகிறது. அதனை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைப்பதை ஏற்க முடியாது. மாநகராட்சி நிர்வாகமே குடிநீர் விநியோக பணியையும், பராமரிப்பு பணியையும் மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகத்தை மேம்படுத்திட வேண்டும்.

மேலும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சூயஸ் கால்வாயை வெட்டிய சிறந்த நிறுவனத்திடமே ஒந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என தெரிவித்து வருகின்றனர். இது தவறான தகவல் ஆகும். 1859 – 69 ஆண்டுகளில் சூயஸ் கால்வாய் வெட்டப்பட்டது. அதன் பின்னர் 1956 வரை அதனை பராமரிப்பு செய்தனர். அதன்பின் எகிப்தின் அதிபராக நாசீர் பொறுப்பேற்றவுடன் அந்த கால்வாய் தேசியமயமாக்கப்பட்டது. இதன்பின்னர் அந்த கால்வாயை பாராமரித்து வந்த நிறுவனம் காணாமல் போனது. மேலும் தற்போது கோவை குடிநீர் விநியோக பணியில் ஒப்பந்தம் செய்திருக்கும் நிறுவனம் 1997ல்தான் துவங்கப்பட்டிருக்கிறது. மக்களிடம் தவறான தகவலை சொல்லி மக்களை அரசு நிர்வாகம் ஏமாற்ற நினைப்பது சரியல்ல. ஆகவே, கோவை மாநகராட்சி நிர்வாகம் சூயஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகளை ஒன்றிணைத்து பெரும் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: