சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் செவ் வாய்க்கிழமை(ஜூலை 3) கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110-ன்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 அறிவிப்புகளை வெளியிட்டார்.

கட்டடம் மற்றும் இதர கட்டுமானப் பணிகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதல் கட்டமாக 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட பெட்டகம் ரூ. 5 கோடி செலவில் வழங்கப்படும். இந்த பெட்டகம் பாதுகாப்பு காலணிகள், தலைக் கவசம், கையுறைகள், பாதுகாப்பு கண்ணாடிகள் கொண்டதாகும். கோவையில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகங்களுக்கு ரூ. 4 கோடியே 3 லட்சம் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். கிருஷ்ணகிரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் கட்டித்தரப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

சென்னை அயனாவரம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைக்கு ரூ. 7 கோடி செலவில் ‘சிடி ஸ்கேன் கருவி’ வழங்கப்படும். தொழிலாளர் அரசு ஈட்டுறுதி 7 மருத்துவமனைகளில் 3 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் அவசர சிகிச்சை பிரிவு உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

புதிதாக சார்பதிவாளர் அலுவலகம்:
வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் 10 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடம் ரூ. 10 கோடி செலவில் கட்டப்படும். இஸ்லாமிய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 6 கோடி மானியம் வழங்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் விடுதி மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 502 விடுதிகளில் நான்கு பகுதிகளிலும் விடுதி ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவில் 5 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் ‘சிசிடிவி கேமரா’ பொருத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் சொந்தக் கட்டடத்தில் இயங்கி 595 விடுதிகளின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடப்பாண்டில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்படும்.

மதுரை மாவட்டம் மதிப்பனூர், மேலத் திருமாணிக்கம், தேனி மாவட்டம் மு.பெருமாள்பட்டி, பாலார்பட்டியிலுள்ள நான்கு அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் கொ. புளியங்குளம், அ.புதுப்பட்டி, வி. பெருமாள்பட்டி ஆகிய 3 அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். இதேபோல், தேனி மாவட்டம் அன்னஞ்சி, திண்டுக்கல் தெப்பத்துப் பட்டி, மதுரை கோவிலாங்குளம் ஆகிய 3 அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: