டேராடூன்; 
பள்ளி ஆசிரியையாக இருக்கும் உத்தரகண்ட் முதல்வரின் மனைவி, 22 ஆண்டுகளாக இடமாற்றமே செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக இருக்கிறார். அண்மையில், குறைதீர் கூட்டம் ஒன்றில் ராவத் கலந்து கொண்டார். அப்போது, அரசுப் பள்ளி ஆசிரியையான உத்ரா பகுகுணா என்பவர், முதல்வரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

தாம் 25 ஆண்டுகளாக கிராமப்புறங்களிலேயே பணியாற்றி வருவதால், பணியிட மாறுதலில் மீண்டும் தொலைதூர இடங்களை ஒதுங்கி விடக் கூடாது என்று அந்த மனுவில் வலியுறுத்தினார். ஆனால், அந்த இடத்திலேயே உத்ரா பகுகுணாவின் கோரிக்கையை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நிராகரித்தார். இதற்கு பகுகுணா, தனது எதிர்ப்பை தெரிவித்து, திரிவேந்திர சிங் ராவத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உத்ரா பகுகுணா

ஆசிரியை ஒருவரின் நியாயமான கோரிக்கையை புரிந்து கொள்ளாத முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், மாறாக தனது அதிகாரத்தை காட்டும் வகையில், ஆசிரியை பகுகுணாவை கைது செய்யவும் உத்தரவிட்டார். போலீசாரும் அவரைக் கைது செய்து சிறையில் வைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் மனைவி சுனிதா ராவத்தும் ஒரு ஆசிரியைதான் என்றும், ஆனால் கடந்த 22 ஆண்டுகளாக அவர் ஒருமுறை கூட இடமாற்றம் செய்யப்படவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகி இருக்கிறது. இதுதொடர்பாக தற்போது கருத்து தெரிவித்துள்ள ஆசிரியை உத்ரா பகுகுணா, ‘என்னைப் போன்ற ஏழை ஆசிரியைகள் மட்டுமே துயரப்படுகிறோம்; ஆனால், சுனிதா ராவத், நகரத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட பள்ளியில் 22 ஆண்டுகளாக இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். 

மேலும், ‘பணியையே விட்டுவிடலாம் என்று கருதினாலும், கணவர் மரணம் அடைந்து விட்டதால், சகித்துப்போக வேண்டியதாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ள பகுகுணா, தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.