சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 3) கேள்வி நேரம் முடிந்ததும் மத்திய இணைய தள நூலகம் தொடர்பாக எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மத்திய பாஜக அரசின் மனிதவள மேம்பாட்டு துறை தொடங்கியுள்ள இணையதள நூலகத்தில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், தமிழ் மொழி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதுமட்டுமல்ல தென்னக மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் நூல்களும் இடம் பெறவில்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு வெறுப்பு அரசியலை விரோதத்தை உருவாக்க தெற்கு, வடக்கு என்று மாநிலங்களை பிளவு படுத்தும் வகையில் மத்திய அரசு நடந்துகொண்டுள்ளது” என்றார்.

தமிழ்நாட்டில் சுமார் 3 லட்சம் எழுத்தாளர்கள் எழுதிய 1 கோடி நூல்கள் உள்ளன. தமிழக வரலாறு உள்ளது. இவையெல்லாம் மத்திய அரசின் இணைய தள நூலகத்தில் இடம் பெறவில்லை. ஆனால், வேதநூல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசு, சமஸ்கிருததுதி பாடுகிறது. தமிழக மக்களை இவ்வாறு புறக்கணித்த மத்திய அரசிடம் முதலமைச்சர் பேசி இணைய தள நூலகத்தில் செம் மொழியான தமிழ் மொழி, தமிழ்நூல்கள் இடம் பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதே கருத்தை வலியுறுத்தி சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி பேசினார். இதற்கு பதில் அளித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜன், “மத்திய அரசு இந்திய தேசிய இணைய தளத்தை தொடங்கி 5 நாட்கள் ஆகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி புத்தகங்களும் இதில் இடம் பெற வேண்டும். இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் அறிய வேண்டும் என்பதற்காகவே இதை தொடங்கியிருக்கிறார்கள். இதில் தமிழ் மொழி நூல்கள் இல்லாதது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சரை உடனடியாக தொடர்பு கொண்டு கேட்டபோது, நாட்டில் உள்ள அனைத்து மொழி புத்தகங்களும் இந்த இணையதள நூலகத்தில் இடம் பெறும் என்று கூறினார்.

தமிழ், குஜராத்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 8 இந்திய மொழி புத்தகங்களும், ஜெர்மன் உள்ளிட்ட 8 வெளி நாட்டு மொழிகளின் நூல்களும் விரைவில் இடம் பெற உள்ளன. முதல் கட்டமாக இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருத நூல்கள் பரீட்சார்த்த முறையில் இடம் பெற்றுள்ளன. அனைத்து மொழிகளும் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  இதில் 149 தமிழ் அறிஞர்களின் 2 ஆயிரம் புத்தகங்கள் மற்றும் தமிழக அரசு உரிமம் பெற உள்ளன. 10 ஆயிரம் புத்தகங்கள்இந்த கணினி நூலகத்தில் இடம் பெறுகின்றன. இன்னும் 2 வாரத்துக்குள் இதற்கான வடிவமைப்புகள் நிறைவு செய்யப்பட்டு அனைவரும் படிக்கும் நிலை வரும்” என்றார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “சென்னையிலுள்ள கன்னி மாரா நூலகத்தில் உள்ள 10 ஆயிரம் புத்தகங்கள் இந்த இணைய தள நூலகத்தில் இடம் பெற செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டு விட்டது” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.