உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தற்போது நாக் அவுட் எனப்படும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ஞாயிறன்று இரு ஆட்டங்கள் நடைபெற்றன.
முதல் ஆட்டத்தில் கோப்பையை வெல்லும் அணி என எதிர்பார்க்கப்படும் ஸ்பெயின் அணியும்,உள்ளூர் அணியான ரஷ்யாவும் பலப்பரீட்சை நடத்தின.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு (12-வது நிமிடத்தில்) கார்னர் பகுதியில் இருந்து கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கார்னர் கிக்கிலிருந்து உதைக்கப்ட்ட பந்து கோல்கம்பத்தை நோக்கி வந்த போது ஸ்பெயின் அணியின் செர்ஜியோ ரமோஸ் பாய்ந்து கோலடிக்க முயன்றார். ஆனால் ரஷ்ய வீரர் செர்ஜி இக்னாஷிவிச் ரமோஸை பிடித்து கீழே தள்ளிய போது,எதிர்பாராத விதமாகப் பந்து செர்ஜி இக்னாஷிவிச்சின் பின்னங்காலில் பட்டு வலைக்குள் சென்று சுயகோலாக மாறியது.

ஸ்பெயின் அணி கோல் கணக்கைத் துவங்கியதால் எங்களுக்கும் கோல் வேண்டும் என ரஷ்ய ரசிகர்கள் மைதானம் பிளிற கோஷமிட்டனர்.ரசிகர்களின் கோஷத்தால் ரஷ்ய அணிக்கு அடித்தது அதிர்ஷ்டம்.41-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் ஜெரார்டு பிக்யூ பந்தை கையால் தடுத்ததால் ரஷ்ய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

பெனால்டி வாய்ப்பில் அந்த அணியின் ஆர்டெம் டிஸ்யூபா கோலடித்து அசத்த, முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தன.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பந்து பெரும்பாலும் நடுகளத்தில் மட்டுமே சுழன்றது.நிர்ணயித்த ஆட்ட நேரம் (90 நிமிடம் +காயத்திற்காக வழங்கப்ட்ட நேரம்) வரை இரு அணிகளும் மேற்கொண்டு கோலடிக்காமல் இருந்ததால் கூடுதல் நேரம் (30 நிமிடம்) வழங்கப்பட்டது. கூடுதல் நிமிடத்திலும் இரு அணிகளும் கோலடிக்க தவறியதால் “பெனால்டி ஷூட்-அவுட்” வாய்ப்பு அளிக்கப்ட்டது.பெனால்டி ஷூட்-அவுட் என்பது இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்படும். இதில் எந்த அணி அதிக கோல் அடிக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
பரபரப்பாக நடைபெற்ற பெனால்டி ஷூட்-அவுட் வாய்ப்பில் ரஷ்ய கோல் கீப்பர் இகோர் அகின்பீவ்வின் அசத்தலான ஆட்டத்தால்,ரஷ்ய அணி 4-3 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

பெனால்டி சூட் அவுட்

ஸ்பெயின்
இனியஸ்டா – கோல்
பிக்யூ – கோல்
கோக்கே – (அவுட்) கோல் இல்லை
ரமோஸ் – கோல்
அஸ்பாஸ் – (அவுட்) கோல் இல்லை

ரஷ்யா
ஸ்மோலோவ் – கோல்
இக்னாஷிவிச் – கோல்
கோலோவின் – கோல்
செரிசேவ் – கோல்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ரஷ்ய அணி (சோவியத் யூனியன் சிதறிய பிறகு) காலிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.