உதகை,
பழங்குடி ஆசிரியர் மீது தொடுக்கப்பட்ட கொடூர தாக்குதல் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்டச் செயலாளர் டி.அடையாள குட்டன், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாநில மனித உரிமை ஆணையம், தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர்களுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம் எருமாடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூன் 26 ஆம் தேதியன்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்தில்வேல் முருகன்,மாவட்ட கல்வி அலுவலர் ஐயப்பன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின்போது அதிகாரிகளுக்கும், பள்ளியில் பணியாற்று ஆசிரியர் ரமேஷ் என்பவருக்கும் இடையே ஒரு சில முரண்பாடுகள் எழுந்ததாகவும், அதைத் தொடர்ந்து வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகள், அனைவரின் முன்னிலையிலும் மிகவும் தரக்குறைவாக ஆசிரியர் ரமேஷை நடத்தியதோடு, அவர் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என காவல் துறையினரை பள்ளி வளாகத்திற்கு வரவழைத்துள்ளனர். இதையடுத்து எருமாடு காவல்நிலைய துணை ஆய்வாளர்கள் சசிதரன், திருமலைச்சாமி ஆகியோர் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனை ஆசிரியர் ரமேஷ் ஆட்சேபித்ததோடு, கல்வி நிலைய பிரச்சனைகளில் எப்படி காவல்துறை அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் வரலாம் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர், அனைவரின் முன்னிலையிலும் ஆசிரியர் ரமேஷின் கைகளையும், கால்களையும் கட்டி மிக மூர்க்கமான முறையில் தாக்கியுள்ளனர். இதை கல்வித் துறை அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துள்ளனர். கடுமையாக தாக்கப்பட்ட ஆசிரியர் ரமேஷ், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் மீது இத்தகைய கொடூரமான தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மேலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டிய குற்றமும் ஆகும். எனவே, இந்த சம்பவம் குறித்து உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதோடு, கல்வித் துறை அதிகாரிகள் செந்தில்வேல் முருகன், ஐயப்பன் மற்றும் காவல் துணை ஆய்வாளர்கள் திருமலைச்சாமி, சசிதரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்டக்குழுவின் சார்பில் கேட்டுக் கொள்வதாக அப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.