சென்னை,
குமரி மாவட்டம் சுருளகோடு, வீரப்புலி காப்புக்காடு பகுதிகளை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் வெளிமண்ட பகுதியாக அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சட்டப்பேரவையில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின்,“குமரி மாவட்டத்திலுள்ள சுருளகோடு, வீரப்புலி காப்புக்காடு பகுதிகள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் இடர்தாங்குப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடி, ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும்.  ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் தொழிலும் விவசாயமும் பாதிக்கப்படும். அந்த பகுதியில் வசித்து வரும் தொழிலாளர்களும் குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் கடந்த 6 மாத காலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, அரசாணை எண் 201 ரத்து செய்து புலிகள் காப்பக பகுதி என்பதை மாற்ற வேண்டும்” என்றார்.

இதே கருத்தை காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் வலியுறுத்தினார். இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் சீனிவாசன்,“ குமரி மாவட்டத்தில் வன உயிரினச் சரணாலயத்தில் 2,0136 ஹெக்டர் பரப்பளவு மட்டுமே புலிகள் காப்ப இடர்தாங்குப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்குள் வீரப்புலி காப்புக் காட்டு பகுதி 1,2524 ஹெக்டர் பரப்பும், கிளைகோடு பகுதி 2,577 ஹெக்டர் பரப்பும் அமைந்துள்ளது. சுருளகோடு கிராமம் காப்புக் காட்டின் எல்லைப் பகுதிக்கு அருகாமையில் அமைந்திருந்தாலும் இடர்தாங்கு பகுதி எல்லைக்குள் வரவில்லை. எனவே, களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அருகில் உள்ள இந்த கிராமங்களை சேர்ந்த பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.