திருப்பூர்,
திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் உலக பின்னலாடை வர்த்தகத்தில் பங்குபெற பசுமை தரச்சான்று பெற தீவிரம் காட்டி வருகின்றன.

ஆயத்த ஆடை வர்த்தக சந்தையில் உலக அளவில் போட்டி அதிகரித்து வருகிறது. வர்த்தக போட்டிகளை எதிர்கொண்டு, ஆர்டர்களை பெறுவதற்கு திருப்பூர் பின்னலாடை துறையினர் பல்வேறு யுக்திகளை கையாளுகின்றனர். பசுமை பாதுகாப்புக்கு, வெளிநாட்டு வர்த்தகர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.இதனால், திருப்பூர் கார்ப்பரேட் பின்னலாடை நிறுவனங்கள் உள் கட்டமைப்புகளை நவீனப்படுத்த துவங்கி உள்ளனர்.  மேலும், நவீன இயந்திரங்களுடன் தொழிற்சாலை அமைத்து வருகின்றனர். இங்கு கார்டன், விளையாட்டு மைதானம், கேன்டீன், ஓய்வு அறை மற்றும் காற்றாலை, சூரிய மின் சக்தி அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மரக்கன்று நடுதல், சமூக நல உதவிகள் வழங்குவது உள்பட இயற்கை மற்றும் சமூக பாதுகாப்பில் முனைப்பு காட்டுகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், பசுமை தரச்சான்று பெற முயற்சித்து வருகின்றன. இந்நிறுவனங்களில், ஐதராபாத் கிரீன் கோ வல்லுனர்கள் ஆய்வு நடத்தினர். சூரிய ஒளி மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி மற்றும் ஆடை உற்பத்தியில் மூலப்பொருள் வீணாவதை தடுக்க மேற்கொள்ளும் தொழில் நுட்பம், பசுமை பணியில் நிறுவனத்தின் பங்களிப்பு என அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு நடத்தினர். மேலும், பின்னலாடை நிறுவனங்கள் செய்துள்ள பணிகள் குறித்து மதிப்பீடு செய்து, பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வெண்கலம் என தரவரிசைப்படுத்தப்பட்டு சான்று வழங்கப்படுகிறது. சான்று பெற்ற நிறுவனங்களுக்கே வெளிநாட்டு வர்த்தகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளன. எனவே திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு பசுமை தரச்சான்று கிடைக்கும் பட்சத்தில் ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: