தாராபுரம்,
தாராபுரம் அருகே தனியார் பனியன் கம்பெனி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் பலியானார்கள். பனியன் கம்பெனி நிர்வாகத்தை கண்டித்து இறந்தவர்களின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தாராபுரம் அருகே உள்ள காளிபாளையத்தில் பனியன் கம்பெனி இயங்கி வருகிறது. இதற்காக ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புளியம்பட்டி, சாலக்கடை, கள்ளிமந்தையம், வடபருத்தியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பனியன் கம்பெனி வேனில் அழைத்து வருவது வழக்கம். இந்நிலையில் திங்களன்று காலை வழக்கம்போல் வேனில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் வந்தபோது மேட்டுப்பட்டி என்ற இடத்தில் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் கோப்பயம்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி (45), புளியம்பட்டியை சேர்ந்த பார்வதி (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விபத்து குறித்து தகவல் தெரிந்தும் மாலை வரை பனியன் கம்பெனி நிர்வாகத்தினர்மருத்துவமனைக்கு வந்து தொழிலாளர்களை பார்க்கவில்லை. இதனால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆவேசமடைந்து தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தாராபுரம் காவல்துறையினர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கள்ளிமந்தையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: