சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று (ஜூலை 2) நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க் கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்,“ காவிரி பிரச்சனை தொடர்பாக நீண்ட நெடுங்காலம் போராடி காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்குபடுத்தும் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் முதல் கூட்டம் இன்று(ஜூலை 2) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நன்மை கிடைக்க வாழ்த்துகிறேன்” என்றார்.

உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு, நமக்கு ஏறக்குறைய 15 டி.எம்.சி. தண்ணீர் இழப்பு என்றாலும் நீதிமன்ற உத்தரவுப்படியாவது நமக்கு கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகிறார்கள். ஆனால், இதை தடுக்க கர்நாடக முதலமைச்சர் முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார். இருந்தாலும், இன்று நடக்கும் முதல் கூட்டத்தில் நமது உரிமைகளை பெரும் வகையில் நமது அதிகாரிகள் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்தார். கர்நாடக மாநிலத்தில் அதிக மழை பெய்துள்ளதால், அதனால் வெளியேற்றப்படும் தண்ணீரை நமது பங்கில் கணக்கு வைத்துவிடக் கூடாது. சுமூகமான முறையில் நமது பங்கை பெற்றே தீரவேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, ஆலோசனை நடத்திய கர்நாடக முதலமைச்சர், உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாககூறியுள்ளார். மக்களவையில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும். அதற்காக, தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பதை எடுத்துக் காட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு வேண்டுகோள்விடுத்தார்.

இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றம்சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது. 15 ஆண்டு இந்த தீர்ப்பை நடை முறைப்படுத்த வேண்டும் என்ற உறுதியான தீர்ப்பை கொடுத்திருக்கிறது. அத்தோடு இதன் செயல் பாடுகள் பற்றியும் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது” என்றார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நமது தரப்பில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பதை நமது பிரதிநிதிகளுக்கு சொல்லி இருக்கிறோம். மூத்த அமைச்சர்கள், அரசு வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் கலந்து பேசி அவர்கள் செயல்பட வேண்டிய முறைகளை தெரிவித்து இருக்கிறோம். உச்சநீதிமன்ற உத்தரவுப் படி நமக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு விட்டது. 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் ஒழுங்காற்று குழு கூடி நமக்கு தர வேண்டிய தண்ணீர் அளவை நிர்ணயிப்பார்கள். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்திற்கு பிறகு அது செயல்படும் விதம் நமக்கு தெரிய வரும். அதன் பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நாம் தக்க முடிவை எடுப்போம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.