சென்னை,
தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்காக புதிதாக 5 விடுதிகள் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி அறிவித்தார்.

தமது துறை மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்கு திங்களன்று(ஜூலை2) பதிலளித்து பேசிய அமைச்சர் வளர்மதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களின் நலனுக்காக தமிழகம் முழுவதும் 1343 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் 1,112 பள்ளிக் கூடங்கள் மற்றும் 636 கல்லூரி விடுதிகள் உள்ளன. 6 பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும் என்றார். கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மனத் திறன் மற்றும் உடல் திறன் வளர்ச்சியையும் மேம்படுத்தும் பொருட்டு 292 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ரூ. 39 லட்சத்து 20 ஆயிரம் செலவில் விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிறித்துவ மகளிர் சங்கம்ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட மற்றும் வயதான கிருத்துவ மகளிருக்கான வாழ் வாதாரத்திற்கு உதவும் வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆட்சியர்களை தலைவராக கொண்ட கிருத்துவ மகளிர் உதவும் சங்கம் மாவட்டந் தோறும் அமைக்கப்படும். ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு முதல் 500 லிருந்து 600 ஆக உயர்த்தப்படுகிறது என்றும் ஹஜ் குழுவிற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஆண்டு நிர்வாக மானியம் ரூ. 30 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச் சர் கூறினார்.

விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுச்சுவர் இல்லாத 21 இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவியர்களுக்கு ரூ. 6 கோடியே 20 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுக்கப்படும். 209 விடுதிகளில் கூடுதலாக ஒரு சமையலர் பணியிடம் உருவாக்கி கொடுக்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட 39 தனியார் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர கட்டணம் 250 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.