காங்கயம்,
உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை முதல் (ஜூலை 3) தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.ரமேஷ் காங்கயத்தில் திங்களன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுதருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாள்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த உத்தரவு வெளியிட வேண்டும். கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டும். ஒன்றியப் பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் உடனே நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட வளர்ச்சித்துறை அனைத்து நிலை அலுவலர்களின் 27 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பல கட்டப் போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் இதுவரை எங்கள் கோரிக்கைகள் அரசால் நிறைவேற்றப்படவில்லை.

எனவே, ஜூலை 3-ஆம் தேதி முதல் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து கூட்டமைப்பு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், கிராம ஊராட்சி செயலாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஓவர்சீயர்கள் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சாலை ஆய்வாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலர்கள் வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர் என தெரிவித்தார்.இந்த சந்திப்பில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆர்.ஞானசேகரன், மாவட்ட செயலர் பி.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் டி.சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.