திருவண்ணாமலை:
சென்னை – சேலம் இடையே அமைக்கப்படும் எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட, வாட்ஸ் ஆப் மூலம் கல்லூரி மாணவர்களை தூண்டியதாக 5 பேரை சேலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை அழித்து அமைக்கப்படவிருக்கும் சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை காந்தி சிலை அருகே பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடைபெற இருப்பதாகக் கூறி, விஜயகுமார் என்பவர் புகைப்படம் ஒன்றை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

அந்த படத்தை வெளுங்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த பவுன்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் வாட்ஸ் ஆப்பிலேயே பரப்பியதுடன், பிறருக்கும் பகிருமாறும் கோரியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டத்தை தூண்டியதாக 3 பேரையும் திருவண்ணாமலை நகர காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பி போராட தூண்டியதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரையும் ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்து உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் கதிர்வேல் (27) என்பவரையும் சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்கிடையே செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆலத்தூர், ஓரந்தவாடி, நயம்பாடி, சி.நம்மியந்தல் ஆகிய கிராமங்களில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. சி.நம்மியந்தலில் பெண்கள் மற்றும் விவசாயிகள் நிலம் அளவீடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ரே‌சன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை நிலம் அளவீடு பணிக்கு வந்த அதிகாரிகளின் முன்பு வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட வேண்டாமாம்:எஸ்.பி. கூறுகிறார்

இதனிடையே திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, பல்வேறு கல்லூரி மாணவர்களை அலுவலகத்திற்கு அழைத்துப் பேசினார். அப்போது, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். போராட்டத்தில் பங்கேற்று படிப்பையும் எதிர்காலத்தையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: