போபால்;
பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக, தலித் குடும்பத்தினரை, 2 ஆண்டுகளுக்கு ஊர் விலக்கம் செய்த கொடுமை நடந்துள்ளது.மத்தியப்பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தில் இருப்பது லோதாபூர்வா கிராமம். இங்கு பொதுக்கிணறு ஒன்று உள்ளது. அதில், தலித் குடும்பத்தினர் தண்ணீர் எடுத்ததாக கூறப்படுகிறது. இவ்வளவுக்கும் இந்த தண்ணீர் குடிநீர் கிடையாது. குளிப்பதற்கும் மற்றவற்றுக்கும் மட்டுமே பயன்படும்.

இந்நிலையில், தலித் குடும்பத்தினர் எப்படி, பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கலாம் என்று கூறி, சாதி ஆதிக்க கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், கிராமத்தில் கூட்டப்பட்ட கட்டப்பஞ்சாயத்தில், சம்பந்தப்பட்ட தலித் குடும்பத்தினரை இரண்டு ஆண்டுகளுக்கு கிராமத்தை விட்டு விலக்கி வைப்பதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி தற்போது பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்திற்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதுடன், மருத்துவர்களும் கூட இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளனர். உள்ளூர் மளிகைக் கடைக்காரர்கள் யாரும் பொருட்களும் தருவதில்லை.

தற்போது, திகம்கார் காவல்துறை, தானாக முன்வந்து கிராம பஞ்சாயத்தினர் பிறப்பித்த ஊர் விலக்கத்தை விசாரிக்க முடிவெடுத்துள்ளனர்.திகம்கார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர குமார் ஜெயின், இவ்வழக்கை உதவி கோட்ட காவல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளார். விசாரணை அறிக்கையை ஆய்வு செய்தபின் தலித் வன்கொடுமை சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.