பி.ராமமூர்த்தி
சேலம் மாவட்ட செயலாளர், சிபிஐ(எம்)                                                                                                                           சேலம் சிவக்க இருக்கிறது. செங்கொடிகளால் மட்டுமல்ல. சமூக அவலங்களை கண்டு கோபத்தில் சிவக்கிறது. ஆம். தமிழகம் முழுவதும் பெண்கள், குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்முறை அதிகரித்து வருவதில் சேலம் மாவட்டம் முன்னணியில் இருப்பது வேதனை தருகிறது.

கடந்த 3மாதத்தில் மட்டும் 31பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி தொகுதியில் கூட கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3குழந்தைகள் பாலியல் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

எடப்பாடி தொகுதி ஜலகண்டாபுரம் மேட்டுத்தெருவில் வசிக்கும் தறி தொழில் குடும்பத்தைச் சார்ந்த 5வயது சிறுமியை வீட்டின் உரிமையாளரின் மகன் ராஜா என்பவன் தொடர்ந்து பல நாட்கள் பாலியல் சித்தரவதை செய்துள்ளான். மற்றும் மலையம்பாளையம் காட்டுவளவில் வசிக்கும் 7வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி 62வயதான அருணாச்சலம் என்ற வெறியன் பாலியல் சித்தரவதை செய்தபோது அலரல் சத்தம் கேட்டு வந்து பொதுமக்கள் காப்பாற்றி உள்ளனர்.

கருணை நகரில் கூலித் தொழிலாளி குடும்பத்தைச் சார்ந்த 3ஆம் வகுப்பு படிக்கும் தலித் சிறுமியை எதிர் வீட்டில் இருக்கும் 22வயது பையன் காட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை சித்தரவதை செய்துள்ளான். ஓமலூரில் 14வயது சிறுமியை 72வயது கொடியவனும், தாரமங்கலத்தில் 11வயது சிறுமியை 70வயது கொடியவனும் வன்புணர்ச்சி செய்த கொடுமை நடந்துள்ளது. ஓமலூர் நாரணம்பாளையத்தில் தனியார் பஸ்ஸில் இரவு 9மணியளவில் 14வயது சிறுமியை 3 கயவர்கள் கூட்டு பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

சீலநாயக்கன்பட்டி மேம்பாலம் அடியில் படுத்திருந்த 11வயது சிறுமியை பாலியல் சித்தரவதைக்கு ஆளாகியுள்ளார். சேலம் புதுரோட்டில் 13வயது சிறுமியை 3பேர் ஆட்டோவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இளம்பிள்ளையில் விணுப்பிரியா என்ற கல்லூரி மாணவி முகத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவமானப்படுத்தியதில் விணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார்.
காடையாம்பட்டியில் 14வயது சிறுமியை சொந்த சித்தப்பாவே பாலியல் வல்லுறவுக்கு கட்டாயப்படுத்தியபோது அந்த பெண் மறுக்கவே, பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு, கழுத்தை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுமட்டுமல்ல மேட்டூர் மின் வாரிய பண்டக சாலையில் பண்டகசாலை காவலரே பெண் ஊழியர் ஓருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சேலத்தில் துப்புரவு மேற்பார்வையாளர் ஒருவர் பெண் துப்புரவு தொழிலாளிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இப்படி எண்ணற்ற நிகழ்வுகள் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை கொடுமை அவலம் சேலம் மாவட்டத்தில் தொடர் நிகழ்ச்சியாக உள்ளது.
கடந்து மூன்று மாதங்களில் வெளிவந்த 31பாலியல் சித்தரவதையில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வைத்ததில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்க தலையீடுகள் மட்டுமல்ல, தொடர் போராட்டங்களும் நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் இன்னும் வெளிவராத சம்பவங்கள் ஏராளம் ஏராளம்.

இந்த சமூக அவலத்திற்கு முடிவு கட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஜூலை-3ல் போராட்ட களம் காணுகிறது. ஜுலை-3ல் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரமாண்டமான பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநில மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.பிருந்தாகாரத், சிபிஐஎம் மாநில செயலாளர் தோழர். கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் தோழர். உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். ப.செல்வசிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று கருத்துரையாற்ற உள்ளனர்.

பாலியல் வன்முறைக்கு முடிவு கட்டிட சேலம் தமுஎகச சார்பில் சூசனம்மாள் ஹாலில் இரண்டு நாள் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி அந்த அமைப்பு நடத்துகிறது.இந்த கொடுமைக்கு முடிவு கட்டிட, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி நடைபெறுகிற இந்த மாநில மாநாட்டை வெற்றிகரமாக்கிட பெரும் எண்ணிக்கையில் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்றிட அழைக்கின்றோம். அணி வகுத்து வாரீர்.

Leave a Reply

You must be logged in to post a comment.