புதுதில்லி: மத்திய அரசாங்கம், பல்கலைக் கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக இந்தியா உயர்கல்வி ஆணையம் ஒன்றைக் கொண்டுவருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:  பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு அதற்குப் பதிலாக இந்தியா உயர் கல்வி ஆணையம் என்னும் அமைப்பினைக் கொண்டுவருவதற்கு தற்போதைய மத்திய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

இதற்கான வரைவுச் சட்டமுன்வடிவை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவந்து, விவாதம் மற்றும் பின்னூட்டத்திற்குப் போதிய கால அவகாசம் அளித்திடாமல், அவசர அவசரமாக  நிறைவேற்றிட வேண்டும் என்று மத்திய அரசு துடித்துக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ (`minimum government, maximum governance’) என்று இந்த ஆட்சியாளர்கள் அடிக்கடி வாய்ச்சவடால் அடித்தபோதிலும், இவர்கள் முன்வைத்திருக்கும் வரைவுச் சட்டமுன்வடிவானது பல்கலைக் கழகங்களுக்கு நிதி வழங்கும்  அதிகாரத்தை, அரசாங்கம் தானே எடுத்துக் கொள்வதற்கான திட்டத்தைத்தான் முன்மொழிந்திருக்கிறது. இதனால் இதுநாள்வரையில் இதுதொடர்பாக கல்வியாளர்கள் சம்பந்தப்பட்டிருந்த நடைமுறைகள் அனைத்தும் முறித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த நடவடிக்கையானது, ‘அனைத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரே அளவு’ (‘one size fit all’) அணுகுமுறையை நிறைவேற்றக்கூடிய விதத்தில், கல்வியை மேலும் வணிகமயமாகுவதைக் குறிக்கோளாகக் கொண்டே கொண்டுவரப்படுகிறது.

தற்சமயம் வரையறைகள் இருந்தபோதிலும், பல்கலைக் கழக மானியக்குழு, விவகாரங்களைக் கவனிப்பதிலும், செயல்படுத்துவதிலும் கல்வியாளர்களுக்குச்  சற்று சுயாட்சி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கொண்டுவரப்படுகிற சட்டமுன்வடிவில், இவ்வாறு மூடிமறைத்திடும் மழுப்பல் நடவடிக்கைகள்கூட கைவிடப்பட்டுவிட்டன. அனைத்து முடிவுகளும் அதிகாரவர்க்கத்தாலும் அரசாங்கத்தில் உள்ள அரசியல் எஜமானர்களாலும்தான்  மேற்கொள்ளப்படும்.

நாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும், யோசனை செய்யமுடியாத அளவிற்கு துரிதகதியில் கொண்டுவரக் கூடாது.  நாட்டின் உயர்கல்வியின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படுகிற பல்வேறு அமைப்புகளும் கோரியுள்ளபடி,   இதுதொடர்பாக முன்மொழியப்பட்டிருக்கிற சட்டமுன்வடிவை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: