தூத்துக்குடி;
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது யாராவது வாக்குமூலம் தந்தால் எஸ்.சி / எஸ்டி சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் துாத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

தூத்துக்குடியில் கடந்த மே 22 ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கடந்த 3 நாட்களாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மே 22 மற்றும் 23 தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தனர். இதில் 4 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, அவர்களின் உறவினர்களிடம் நான் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றேன். கடந்த 28,29 தேதிகளிலும் இன்றும் (ஜூன் 30) என 3 தினங்கள் தூத்துக்குடியில் விசாரணை நடத்தினேன்.
துப்பாக்கிச்சூட்டின் போது இருந்த மற்றும் தற்போது உள்ள காவல்துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் காளியப்பன் குடும்பத்தினர் மருத்துவ உதவிகள் கேட்டனர். எனவே, அவர்களுக்கு அந்த உதவியை அளிக்க உத்தரவிட்டேன். கந்தையா என்பவரின் மகன் மனநலம் குன்றியவர். எனவே, மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். காளியப்பனின் தந்தைக்கு மனநலம் பாதித்துள்ளது. அவரது தாயாருக்கு மருத்துவ உதவி அளிக்க உத்தரவிட்டேன். பாதிக்கப்பட்ட மக்கள் மனதில் பயம் சூழ்ந்துள்ளது.

அதைப் போக்கும் அளவில் மனநல ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கு பின் பள்ளி, கல்லுாரி செல்லாதவர்கள் பற்றி கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில அதிகாரிகளை நான் விசாரிக்க வேண்டியுள்ளது. ஆனால், அவர்களுக்கு சம்மன் அனுப்பி தில்லி அல்லது சென்னையில் வைத்து விசாரணை நடக்கும். மூன்று நாட்களில் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 20 பேரை சந்தித்து வாக்குமூலம் பெற்றுள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் தாழ்த்தப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களின் காயம், ஊனம் சதவிதம் குறித்து விசாரித்து நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டேன். தேவைப்பட்டால் மீண்டும் தூத்துக்குடி வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்துவேன்.

கச்சநத்தம் பிரச்சனை
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் பிரச்சனையில் பாதிக்கபட்டவர்களுக்கு 15 லட்சம் வரை அரசிடம் இருந்து பெற்று தந்துள்ளேன்.துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறையினர் மீது தாழ்த்தப்பட்டோர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர் கேட்டதற்கு, இதுவரை அதுகுறித்து வாக்குமூலம் யாரும் தரவில்லை. கொடுத்தால் அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்சி / எஸ்டி நலத்திட்ட உதவிகள் முடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுகுறித்து விசாரித்து வருகிறோம். தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளில் ஸ்டீம் பாய்லர் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டு குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.