உச்சநீதிமன்றம் செல்கிறது கர்நாடகம்!

பெங்களூரு:
கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் சனியன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் குறித்து பிரச்சனையை கிளப்பவும் கூட்டம் தீர்மானித்துள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றம்!

சென்னை:
பள்ளிக்கல்வித்துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த இளங்கோவன் ஓய்வு பெறுவதாக அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இடைநிலை கல்வித்திட்டத்தின் கூடுதல் திட்ட இயக்குநராகப் பணிபுரிந்து வரும் ராமேஸ்வர முருகன் என்பவர் பள்ளிக்கல்வித்துறையின் புதிய இயக்குநராகப் பதவி வகிப்பார் எனக் குறிப்பிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தேசத்துரோக வழக்கில் கைது!

ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராகப் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த கொளஞ்சி காவல்துறையால் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். முன்னதாக கொளஞ்சியைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார் அவர் வீட்டில் இல்லாததால், வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் அடித்து உடைத்திருக்கிறார்கள்.

கனவு காண உரிமை உள்ளது!

புதுதில்லி:
ஐ.நா சபையின் பெண்களுக்கான இந்தியப் பிரிவு, சாதனை புரிந்த இந்தியப் பெண்களைப் போற்றும் வகையில் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளது. `கனவு காண எனக்கு உரிமை உள்ளது’ எனப் பெண்கள் பாடும் வகையில் அந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய், ஆஷா போன்ஸ்லே, சானியா மிர்சா, மித்தாலி ராஜ் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

டொரன்டோவிலும் தமிழ் இருக்கை!

ஹார்வர்டு :
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து, கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பினரே முன்னின்று, கனடா தமிழ் பேரவையுடன் இணைந்து, இதை நடத்தியுள்ளனர். இதற்காக 6,00,000 கனடா டாலர்கள் ஒரே இரவில் திரட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: