தீக்கதிர்

கவுரியம்மாவுக்கு 100 வயது…!

ஆலப்புழா:
புதிய கேரளத்தின் பெண்குரலான கவுரியம்மாவுக்கு ஜூலை 1 அன்று நூறாவது பிறந்த நாள். வரலாற்றின் போக்கை மாற்றிய போராட்டங்களின் கரடு முரடான பாதைகளைக் கடந்து வந்தவர் கவுரியம்மா. களத்தில்பரம்பில் ராமன் – பார்வதி அம்மாவின் மகளாக ஆலப்புழாவில் உள்ள பட்டணக்காட்டில் பிறந்தவர் கவுரியம்மா.

மக்கள் போராட்டங்களுக்கு தலைமை வகித்து கேரள அரசியலின் முக்கிய முகமாக மாறினார். அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருந்த காலகட்டம் அது. வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த கவுரியம்மாவுக்கு ஸ்ரீநாராயணகுருவும், குமாரன் ஆசானும், பெரியாரும், சி.வி.குஞ்ஞிராமன் போன்றோர் அரசியலில் ஆர்வத்தை ஏற்படுத்தினர்.

பி.கிருஷ்ணபிள்ளையின் பாதையில் 1948 இல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். டி.வி.தாமஸ் இவரது கணவர். இஎம்எஸ் தலைமையிலான கேரள அரசு கொண்டுவந்த நிலச்சீர்திருத்தச் சட்டத்தை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி கேரள மக்களின் அன்புக்குரிய தலைவரானார்.

இவரது நூறாவது பிறந்தநாள் விழா ஆலப்புழா ரெய்பாபன் ஆடிட்டோரியத்தில் ஞாயிறன்று பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. பிறந்த நாளை முன்னிட்டு அவரை சந்தித்த செய்தியாளர்கள் தற்போதைய அரசு குறித்து கேட்டபோது, ‘கேரளத்தில் எல்லோருக்கும் குடியிருக்க வீடு கிடைத்திருக்கிறதே’ என்றார்.