புதுதில்லி: திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, எல்ஐசி போன்ற நிறுவனங்களைத் துஷ்பிரயோகம் செய்வதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் செயல்படா சொத்துகள் காரணமாக  மிகவும் மோசமான முறையில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஐடிபிஐ என்னும் இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பேங்க் ஆப் இந்தியா என்கிற வங்கியை காப்பாற்றுவதற்காக, ஆயுள் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம்  அதன் மூலதனத்தில் கணிசமான பகுதியை டெபாசிட் செய்திடுமாறு மத்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

எல்ஐசி நிறுவனமானது இன்சூரன்ஸ் பாலிசிகளின் வடிவத்தில் மக்களின் சேமிப்புத் தொகைகளை வைத்திருக்கும் ஒரு கருவூலமாகும். இந்த மூலதனத்தை, மிக மோசமான நிலையில் உள்ள வங்கிகளைக் காப்பாற்றுவதற்காகப் பயன்படுத்துவது என்பது மக்களின் சேமிப்புத் தொகைகளைச் சூறையாடுவதற்கு ஒப்பானதாகும். இவ்வாறு வங்கிகளிடம் கடன் பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாத பணக்காரர்களின் பெயர்களை மோடி  அரசாங்கம் வெளியில் சொல்லாமல் ரகசியமாகவே வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாது,  இன்சூரன்ஸ் பாலிசிகளாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் சேமிப்புத் தொகைகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஐடிபிஐ வங்கியைக் காப்பாற்றுவதற்காக எல்ஐசி 13 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடாக செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்தத் தொகையை பாலிசிதாரர்களுக்கு மேலும் சிறப்பாகப் பயனுறும் விதத்தில் முதலீடாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். மாறாக, வங்கிகளை ஏமாற்றிய பேர்வழிகளைக் காப்பாற்றுவதற்காக இது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இது மிகவும் மோசமான கூட்டுக்களவாணி வகையிலானதாகும். பணக்காரர்கள் நாட்டைச் சூறையாடலாம், பின்னர் நாட்டைவிட்டே பறந்து சென்றுவிடலாம். அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற பணத்தை, சாமானிய மக்கள் தங்கள் சேமிப்புகளிலிருந்து செலுத்திட வேண்டுமா? மேலும், எல்ஐசி, வங்கி வணிகத்திற்குள் நுழைவதற்கான சட்டஉரிமைக் கட்டளையைப் பெற்றிருக்கவில்லை. மோடி அரசாங்கமானது இதற்காக நாட்டில் இதுதொடர்பாக உள்ள விதிகளில் திடீரென்று மாற்றங்களை நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறது.

வங்கிகளைச் சூறையாடிய பணக்காரர்களை, அவர்கள் வங்கிகளுக்குத் தாங்கள் பெற்ற கடன்களைத் திருப்பிச்செலுத்தாது, அவர்களைப் பாதுகாப்பதற்காக, இந்த அரசாங்கமானது நாட்டில் இதுகாறும் இருந்துவந்த  கட்டுப்பாட்டுப் பொறியமைப்பை (regulatory mechanism)யே, தகர்த்துத் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறது. மத்திய  அரசாங்கம் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: