புதுதில்லி, ஜூன்

உத்தரப்பிரதேச மாநிலம், புலந்தசகர் மாவட்டத்தில் உள்ள சோண்டாஹபிபூர் கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர் (வயது 44) மகன் ஒரு முஸ்லீம் பெண்ணை மணம் செய்து கொண்டார் என்பதற்காக, கிராமத்தைச் சேர்ந்த உயர் சாதியினர் முன்னிலையில் தன் எச்சிலைத் தரையில் துப்பி, தானே நக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ணா ஒரு தொழிலாளி. இவருடைய மகன் சிவகுமார் (வயது 21) என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம் பெண்ணான ரசியா (வயது 18)  என்பவருடன் ஜூன் மாதம் 6ஆம் தேதியன்று  ஊரைவிட்டு ஓடிவிட்டார். பின்னர் இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் குர்ஜா நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்கள்.

ஜூன் 19 அன்று ஸ்ரீ கிருஷ்ணா,  சிவகுமார் – ரசியா ஆகிய இருவரும் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவர்களைக் கிராமத்திற்குத் திரும்ப அழைத்து வந்திருக்கிறார். பின்னர் ரசியா, நீதிமன்றத்தின்முன் ஆஜர்படுத்தப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் ரசியா,  நீதித்துறை நடுவரிடம், தான்  சிவகுமாருடன் விரும்பித்தான் சென்றிருப்பதாகவும் அவருடன்தான் வாழ்வேன் என்றும் கூறியிருக்கிறார். இதனை அடுத்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் அன்றையதினமே அவர்களிருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. இந்நிகழ்வுகளில் ஸ்ரீ கிருஷ்ணாவிற்கு மகிழ்ச்சி இல்லை என்றபோதிலும், மணமக்கள் இருவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டிருக்கிறார். ஏனெனில் அந்தக் கிராமத்தின் வழக்கப்படி ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. அதிலும் அந்தப் பெண் வேறொரு மதத்தைச் சேர்ந்தவராக வேறு இருக்கிறார். எனவே ஸ்ரீ கிருஷ்ணா தன் மகனிடம், “ இந்தக் கிராமத்தைவிட்டு எங்காவது சென்று விடுங்கள், இல்லையேல் உன்னைக் கொன்றுவிடுவார்கள்,” என்று கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர்கள் இருவரும் ஊரைவிட்டுச் சென்றுவிட்டனர்.

பின்னர், ஜூன் 26 அன்று, ஸ்ரீ கிருஷ்ணாவின் சகோதரருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. ரசியாவின் குடும்பத்தார் இப்பிரச்சனை தொடர்பாகப் பேசித் தீர்க்க வேண்டும் என்று விரும்புவதால்,  பஞ்சாயத்தார் முன்னிலையில் ஸ்ரீ கிருஷ்ணா ஆஜராக வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். பின்னர் ஸ்ரீ கிருஷ்ணா தன் இரு சகோதரர்களுடன் அவர்கள் வரச்சொல்லியிருந்த இடத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கே பஞ்சாயத்துக் கூட்டம் எதுவும் இல்லை. மாறாக, அக்கிராமத்தைச் சேர்ந்த உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்திருக்கிறார்கள். ரசியாவின் குடும்பத்தாரும் இருந்திருக்கிறார்கள்.  அப்போதுதான் அவர்களால் மிகவும் தந்திரமாகத் தாங்கள் வரவழைக்கப்பட்டிருப்பதை ஸ்ரீ கிருஷ்ணா உணர்ந்துள்ளார்.

பின்னர் ஸ்ரீ கிருஷ்ணா ஒரு நாற்காலியில் அமர்ந்தபோது, உள்ளூர் தலைவர் ஒருவர் அவர் காதைத் திருகி இழுத்து, கீழே தரையில் உட்காருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். பின்னர் எச்சிலைத் துப்புமாறு கோரப்பட்டிருக்கிறார். எச்சிலைத் துப்பியதும் பின்னர் அதனை நக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணா இதைச் செய்யாமல் ஒருசில நிமிடங்கள் தாமதித்ததும், அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்திருக்கின்றனர். பின்னர் பயந்துகொண்டு ஸ்ரீ கிருஷ்ணா தன் எச்சிலை தானே நக்கி இருக்கிறார். பின்னர் ஊரார், ஸ்ரீ கிருஷ்ணாவிடம், “நீ, உன் குடும்பத்தாருடன் கிராமத்தைவிட்டே ஓடிவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் கடுமையாக இருக்கும்,”  என்று கூறியிருக்கின்றனர். தான் இதற்கு மறுக்கவே, ஸ்ரீ கிருஷ்ணாவை திரும்பத்திரும்ப அடித்து, நையப் புடைத்திருக்கின்றனர். கடைசியில் பதினைந்து நிமிடங்கள் கழித்து இரண்டு பேர் வந்து ஸ்ரீ கிருஷ்ணாவைக் காப்பாற்றி இருக்கின்றனர்.

தற்போது, ஸ்ரீ கிருஷ்ணா கிராமத்தைவிட்டு வெளியேறி காவல் நிலையத்தின் அருகில் இருந்துவருகிறார். அவரது குடும்பத்தார் இப்போதும் கிராமத்தில்தான் இருந்துவருகிறார்கள். அவர்களுக்குப் போலீஸ் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. “நான் திரும்பிச் சென்றால் என்னைக் கொன்றுவிடுவார்களோ என்று நான் பயப்படுகிறேன்,” என்று ஸ்ரீ கிருஷ்ணா கூறுகிறார்.

இது தொடர்பாக புலந்தசகர் மாவட்ட மூத்தக் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண பகதூர் சிங் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் வன்கொடுமைத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பெண்ணின் தந்தை உட்பட ஐவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாகவும், பெண்ணின் தந்தை, புரா கானும், கிள்ளு என்பவனும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  கூறியுள்ளார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.