புதுதில்லி:
வெள்ளையனே வெளியேறு போராட்ட தினமான ஆகஸ்ட் 9 அன்று கொள்ளையர்களே ஆட்சியைவிட்டு வெளியேறுங்கள் என்ற முழக்கத்துடன் நாடு முழுதும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வீரஞ்செறிந்த சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்திடுவோம் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. பல லட்சக்கணக்கான விவசாயிகள் நாடு முழுதும் இந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார்கள். சிஐடியுவின் சார்பில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் விவசாயிகள் சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளுக்காக நடைபெறும் இப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவினைத் தெரிவித்திருக்கிறார்கள்.

விவசாயிகளின் சிறைநிரப்பும் போராட்டத்தை விளக்கி வெள்ளியன்று புதுதில்லியில் உள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது போராட்டத்தை விளக்கி சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, நிதிச் செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத் மற்றும் இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விவசாயிகள் கீழ்க்கண்ட தங்களின் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுதும் 10 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து பெற்றிருக்கிறார்கள்.

(1) விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் அனைத்துவிதமான கடன்களிலிருந்தும் அவர்களுக்கு முழுமையான விடுதலை வேண்டும்.

(2) வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைக்கிணங்க, வேளாண் விளைபொருள்களின் உற்பத்திச் செலவினத்தைவிட ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து, சட்டப்பூர்வமான உத்தரவாதத்தை உறுதிப்படுத்திட வேண்டும், வேளாண் இடுபொருட்களுக்கான செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும்.

(3) நிலத்தை உழுபவனின் பெயரில் நிலம் உடனடியாகச் சொந்தமாக்கப்பட வேண்டும். வன உரிமைகள் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

(4) விவசாயத் தொழிலாளர்கள், ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஓய்வூதியமாக ஐயாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்.

(5) அனைத்து வேளாண் பயிர்களையும் உள்ளடக்கி, விவசாயிகளுக்கு ஆதரவான, ஓர் ஒருங்கிணைந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இத்திட்டத்தின்கீழ் அனைத்து வருவாய் இழப்புகளும் கொண்டுவரப்பட வேண்டும், குடும்ப சுகாதாரக் காப்பீடு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அனைத்துக் கால்நடை வளர்ப்புப் பிராணிகளுக்கும் காப்பீடு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

மேற்படி கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுதும் பத்து கோடி விவசாயிகளிடம் பெற்றிட்ட கையெழுத்துக்களை மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக பிரதமர் மோடிக்கு அளித்திட இருக்கிறார்கள்.

வெள்ளையனே வெளியேறு தினம்
நவீன தாராளமயச் சீர்திருத்தங்களைப் பயன்படுத்தி ஏகாதிபத்திய ஆதரவு கார்ப்பரேட்டுகள் நாட்டைக் கொள்ளையடித்து வருவதற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தைக் குறிக்கும் விதத்தில் ஆகஸ்ட் 9 அன்று விவசாயிகள் சிறைநிரப்பும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இவ்வாறு கார்ப்பரேட்டுகள் நாட்டைக் கொள்ளையடிப்பதற்கு இந்துத்துவா வெறிபிடித்த நரேந்திர மோடி அரசாங்கம் கூட்டுக்களவாணியாக இருந்து உக்கிரமான முறையில் செயல்பட்டு வருகிறது.

நாட்டிலேயே முதன்முறையாக விவசாயத்திலும், சில்லரை வர்த்தகத்திலும் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதம் அனுமதித்திருப்பதுடன், விவசாயத்தில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்கக்கூடிய ஒப்பந்த பண்ணை விவசாயத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. நாட்டில் செயல்பட்டுவந்த பிளிப்கார்ட் நிறுவனத்தை, பன்னாட்டு பகாசுர நிறுவனமான வால்மார்ட் கபளீகரம் செய்துள்ளது ஏகாதிபத்தியம் இணைய வணிகத்திலும் நம் நாட்டிற்குள் புகுந்திருப்பதற்குச் சமீபத்திய உதாரணமாகும். இவ்வாறு, ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணி ‘சுதேசி பொருள்களையே வாங்குங்கள் ’ என்று வாய்ச்சவடால் அளித்தாலும், நடைமுறையில் ஏகாதிபத்தியத்தின் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக மாறி முழுமையாகச் சேவகம் செய்துகொண்டிருக்கிறது.

பாஜக 2014ஆம் ஆண்டு தன்னுடைய தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், அனைத்து விவசாய விளைபொருள்களுக்கும் உற்பத்திச் செலவினத்தைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்படும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிக்கப்படும், அதன் மூலம் விவசாய நெருக்கடி, விவசாயிகள் புலம் பெயர்ந்து செல்லுதல் தடுக்கப்படும் என்று கூறியது. எனினும் எதுவுமே நடந்திடவில்லை. அதேபோன்ற பயிர்க் காப்பீடு, மின்சாரம் மற்றும் பாசனம் தொடர்பாக அது அளித்திட்ட எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றிடவில்லை.

மாறாக, கால்நடை விற்பனைக்குத் தடை போன்றவற்றின் மூலமாகவும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும் அப்பாவி முஸ்லிம்கள், தலித்துகளைக் கொன்று குவித்து வருகிறது. இவை அனைத்தும் கிராமப்புற கால்நடை வளர்ப்பைக் கடுமையாகப் பாதித்துள்ளதுடன், விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரங்களையே அழித்து ஒழித்துவிட்டது. ரூபாய் நோட்டுகள் செல்லாது, ஜிஎஸ்டி போன்றவையும் வேளாண் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளன. மோடி அரசாங்கத்தின் நான்காண்டு ஆட்சி அனைத்துவிதத்திலும் விவசாயிகள்மீது தாக்குதல்களைத் தொடுத்துள்ளன.

இவற்றுக்கு எதிராகவே விவசாயிகளின் சிறைநிரப்பும் போராட்டம் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து 2018 செப்டம்பர் 5 அன்று தலைநகர் புதுதில்லியில் மோடி அரசாங்கத்தின் விவசாயிகள் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஐந்து லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெறுகிறது. இப்பேரணி விவசாயிகளுடன் தொழிலாளர்களும் பங்கேற்கும் தொழிலாளர் – விவசாயிகள் பேரணியாக அமைந்திடும். இப்பேரணிக்கு சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து அறைகூவல் விடுத்துள்ளன.

ஜார்க்கண்ட் ஹர்த்தாலுக்கு ஆதரவு
2018 ஜூலை 5 அன்று ஜார்க்கண்டில் நடைபெறும் ஹர்த்தாலுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் தன் முழு ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது. பாஜக தலைமையிலான ஜார்க்கண்ட் அரசாங்கம் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் மற்றும் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டங்களில் கொண்டுவந்துள்ள மோசமான திருத்தங்களுக்கு எதிராக அம்மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திடும் ஹர்த்தாலுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் தன் முழு ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்தத் திருத்தங்கள் வளமான பழங்குடியினத்தினரின் நிலங்களைக் கார்ப்பரேட் சுரங்க நிறுவனங்கள் கையகப்படுத்திக்கொள்வதற்காகக் கொண்டுவரப்பட்டிருப்பவைகளாகும். இவற்றை அனுமதித்திட முடியாது. இதற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை வெற்றி பெறச்செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அசோக் தாவ்லே, ஹன்னன் முல்லா, கிருஷ்ணபிரசாத், விஜு கிருஷ்ணன் ஆகியோர் கூறினார்கள்.
(ந.நி.)

 

Leave a Reply

You must be logged in to post a comment.