கோவை,
விஷவாயு தாக்கி உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டு மென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

கோவை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக உள்ளார். இவர் வியாழனன்று கோவை காந்திபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி மேலாளரின் வீட்டில் துப்புரவு பணிக்காக சென்றார். இவருடன் சேர்ந்து மேலும் இருவர் சென்றுள்ளார். அப்போது கழிவு நீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கியதில் மகேந்திரன் உயிரிழந்தார். இதையடுத்து மகேந்திரனின் உடல்உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு வெள்ளியன்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து ரத்தினபுரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார் மற்றும் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான், துணை பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் பலியான இளைஞர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். முன்னதாக பலியான இளைஞர் மரணத்திற்கு காரணமானவர்களை கைதுசெய்ய வேண்டும்.

உரிய வழக்கை பதிவுசெய்ய வேண்டுமென கோவை மாவட்டஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் தலைவர்கள் வலியுறுத்தினர்.இளைஞர் பலியான விபத்தில் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் பணி வழங்குதல் (ஐபிசி 284) மனித மலத்தை கையால் அள்ளும் தடைச்சட்டம் (பிரிவு 7 மற்றும் 9) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைபொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், விஷ வாயு தாக்கி மனித உயிர்கள் பலியாவது என்பது கோவை மாவட்டத்தில் தொடர் நிகழ்வாக உள்ளது.

இது குறைந்த கூலியை கொடுத்து வேலைவாங்கலாம் என்கிற வீட்டு உரிமையாளர்களின் சுயநலம் ஒருபுறம், மறுபுறம் ஒடுக்கப்பட்ட மக்கள் கிடைக்கும் வேலையை செய்யலாம் என்று விரட்டுகிற வறுமை ஒருபுறம் உள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதுபோன்ற ஆபத்தான பணிகளை தேவையான உபகரணங்கள் உதவியோடு செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வை அரசு தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.அதேநேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க சம்மந்தப்பட்ட வீட்டு உரிமையாளரை கைது செய்ய வேண்டும். பலியான இளைஞரின் குடும்பத்திற்கான நிவாரணத்தை உடனடியாக அரசு வழங்கி அக்குடும்பத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.