கோவை,
நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்து அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையிடம் வெள்ளியன்று புகார் அளித்தனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர். இவர் பாதிக்கப்பட்ட சிலருடன் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிற என்னிடம் கோவை சீலியூரை சார்ந்த அஜீத் என்பவர் தனது ஆறு கார்களை வாடகைக்கு எடுத்து சென்றார். இதேபோல மற்ற டிராவல்ஸ் உரிமையாளர்கள் சிலரிடம் சில கார்களையும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றார். ஆனால் அதனை திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார். இதனையடுத்து விசாரித்தபோது, அஜீத் தங்களிடம் காரை வாடகைக்கு எடுத்து அதை பலரிடம் அடமானம் வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. வாடகைக்கு கார்களை எடுத்து அதனை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட அஜித் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், கார் உரிமையாளர்கள் பலரிடம் வாடகைக்கு எடுத்த கார்களை சிலரிடம் போலி ஆவணங்களை தயாரித்து விற்று இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆகவே தங்களது கார்களை மீட்டு தர வேண்டும் எனதெரிவித்துள்ளனர்.

முன்னதாக வாடகை கார்களை பறிகொடுத்த 10க்கும் மேற்பட்டோர் தங்களின் கார்களை அஜித் சொல்லியதாக எடுத்து சென்ற சந்திரசேகர் என்பவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சந்திரசேகரனிடம் குற்றப்பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.