ஜெய்ப்பூர்:
பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ராஜஸ்தானில் தலித்துகள் மீதான அடக்குமுறை தொடர்கதையாக மாறியிருக்கிறது.ராஜஸ்தானில் கடந்த பல ஆண்டுகளாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அம்மாநிலத்தின் பில்வாரா நகருக்கு அருகில் உள்ள மங்கல்பூர் கிராமத்தில் புதன்கிழமை இரவில் கம்பு மற்றும் கத்திகளோடு தலித்துகளின் குடியிருப்புக்குள் சாதி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நுழைந்து திடீர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளையும் அவர் விட்டு வைக்கவில்லை.

பல மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் கர்ப்பிணிப் பெண்ணான மாயா என்பவரும் தாக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மழையை எதிர்பார்த்து நிலத்தை தயார் செய்யும் பணியில் தலித் மக்கள் இறங்கியதைக் கண்டு ஆத்திரமுற்ற சாதி ஆதிக்க கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. தலித்துக்களின் நிலத்தை, தங்களின் நிலம் என்று கூறியும், தலித்துக்கள் நிலத்தை ஒப்படைத்து விட்டு ஓடிவிட வேண்டும் என்று மிரட்டியும் சாதி ரீதியான அடக்குமுறையை ஆதிக்க சாதியினர் தொடுப்பதாக தலித் குடும்பங்கள் கூறுகின்றன.இவ்விஷயத்தில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு பேர் கைதாகி இருந்தாலும், தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கிக்காக, இதுபோன்ற தாக்குதல்களை ஆளும் பாஜக-வினர் கண்டுகொள்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. நவம்பர் மாதத்தில் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.