நாமக்கல்,
நாமக்கல் அருகே ஜேடர்பாளையம் ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் கலந்துகொண்டு பேசியதாவது :- தற்போது தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்து வருகிறது. மேட்டூர் அணையிலும் 57 அடி நீர் இருப்பு உள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர், பரமத்தி வேலூர், உள்ளிட்ட பகுதிகளில் வாழை, வெற்றிலை, உள்ளிட்ட பயிர்கள் நடவுசெய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கு ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும். வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விதிகளுக்கு புறம்பாக விவசாயிகள் அல்லாதவர்களும் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். இவர்களை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும். தற்போது மாட்டு தீவனம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விலை அதிகரித்து விட்டது எனவே பால் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவ்வரிசியில் கலப்படம் செய்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்ததன் விளைவாக ஜவ்வரிசி கலப்படம் குறைந்துள்ளது. ஜவ்வரிசியில் கலப்படம் நடக்காமல் இருக்க தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.

மேலும், கலைகொள்ளி, பூச்சி மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இவைகள் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலக்கடலை பயிருக்கு தேவையான சிப்சம் உரம் கிடைக்காமல் தட்டுபாடு உள்ளது எனவே சிப்சம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க செய்யவேண்டும். தோட்டகலைத்துறை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் அரளிபோன்ற பூக்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு மற்ற மாவட்டங்களில் இருப்பதுபோல் மானியம் வழங்கவேண்டும் இவ்வாறு விவசாயிகள் தங்கள் கோரிக்கை குறித்து வலியுறுத்தி பேசினர். இக்கூட்டத்தில் மின்வாரிய செயற்பொறியாளர் சந்தானம், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.