திருப்பூர்,
சேலம் – சென்னை எட்டு வழி சாலைத் திட்டம் தொடர்பாக மக்களின் உணர்வுகளை செய்தி சேகரிக்கும் ஊடகத் துறையினரை கைது செய்வது, அச்சுறுத்துவது என செயல்படும் காவல் துறையின் செயல்பாட்டுக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சங்கத் தலைவர் இரா.கார்த்திகேயன், செயலாளர் எஸ்.கதிர்வேல் ஆகியோர் வெள்ளியன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை திட்டம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சன் டிவி ஒளிப்பதிவாளர் வேலுவை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்திய காவல் துறையைக் கண்டித்தும், அச்சுறுத்தும் வகையில் செய்தியாளரிடம் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், தமிழகத்தில் தொடர்ச்சியாக சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில் மக்களின் உணர்வுகளைப் பதிவு செய்யும் ஊடகத்தினரை பணி செய்யவிடாமல் தடுத்து, கைது செய்யும் தமிழக காவல் துறையினரின் போக்கை திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.