கோவை,
தெற்கு புறவழிச் சாலை திட்டத்தைகைவிடக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கோவை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற ஆராக்குளம், செலக்கரச்சல், ஒத்தக்கால் மண்டபம்,மதுக்கரை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பேசுகையில், ஆராக்குளம், செலக்கரச்சல், ஒத்தக்கால் மண்டபம், மதுக்கரை வழியாக தெற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட அளவீடு  பணிகள் நடைபெறுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், இணைப்புச் சாலைகளாக இரண்டு சாலைகள் இருக்கும் நிலையில் தெற்கு புறவழிச்சாலை என்பது தேவையற்றது.

இதனால் சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என வேதனை தெரிவித்தனர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் தெரிவிக்கையில், இப்பிரச்சனை தொடர்பாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாயிகள் பங்கேற்கும் கூட்டத்தினை நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தனர். இதேபோல, ஆர்.எஸ்.புரம்உழவர் சந்தை பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையிலிருந்து சில விவசாயிகளை வெளியேற்றிய அதிகாரிகள், விவசாயி ஒருவரைத் தாக்கி, அவரிடமிருந்த செல்போனைப் பறித்துள்ளனர்.இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளை மீண்டும் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டுமென பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உழவர் சந்தைகளில் நடைபெறும் முறைகேடுகளை சுட்டிக்காட்டும் விவசாயிகளைப் பழிவாங்குகின்றனர் என விவசாய சங்க தலைவர் பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் எம்.ஆர்.பழனிசாமி, விவசாயிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசினார். இதையடுத்து, அவருக்கும், விவசாயிகளுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்திலிருந்த மற்ற விவசாயிகளும் ஆட்சியர் முன் திரண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அனைவரையும் சமாதானப்படுத்தினர். இதேபோல கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.கந்தசாமி பேசுகையில், மாவட்டத்தில் விளையும் பயிர்கள் குறித்த புள்ளி விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் வருவாய்த் துறையின் அடங்கல் பதிவேட்டில், பல்வேறு பயிர்கள் குறித்த விவரங்களே இல்லை. இதனால் இழப்பீடு, காப்பீடு உள்ளிட்டவற்றை கோரும்போது பாதிப்பு உண்டாகிறது. பயிர்க் காப்பீடு பிரிமியம் கட்டினாலும்கூட, பாலிசி நகல் தருவதில்லை. இது தொடர்பாக தகவல்கூட வருவதில்லை. மின் வாரியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால், டிரான்ஸ்ஃபார்மர் பழுதைக் கூட உரிய நேரத்தில் சரிசெய்வதில்லை என குற்றம்சாட்டினார்.

இதேபோல பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தடுப்பணைகள் சேதமடைந்த நிலையில் உள்ளதால், ஏராளமான நீர் வீணாகிறது. இந்த அணைகளைச் சீரமைக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை விவசாயிகளுக்கு விளக்க வேண்டும். விவசாயிகள் எதிர்க்கும் திட்டங்களை வேகமாகச் செயல்படுத்தும் நிலையில், 40 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசித் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதத்திற்கு காரணம் என்ன? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை விவசாயிகள் ஆவேசமாக எழுப்பினர். இதானல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் பரபரப்பாகவே காணப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.