ஊடக உலகில் உண்மையின் பேரொளியாக ஜொலித்து வரும் தீக்கதிர் நாளேடு 55 ஆண்டுகளை நிறைவு செய்து 56ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. உழைக்கும் மக்களின் கேடயமாகவும், வர்க்கப் போராட்டத்தில் வடித்தெடுக்கப்பட்ட வாளாகவும் திகழும் இந்த ஏடு கடந்து வந்த பாதை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது அல்ல. நெருப்பாறுகளை நீந்திக் கடந்து கடும் நெருக்கடிகளையும் இன்னல்களையும் எதிர்கொண்ட போதும் ஏற்றுக்கொண்ட லட்சியத்தில் தடுமாறாமலும், தடம் மாறாமலும் தடம் பதித்து முன்னேறி வந்துள்ளது தீக்கதிர் ஏடு. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் நடந்த தத்துவார்த்த விவாதத்தின் விளைவாக உருவெடுத்த தீக்கதிர், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடானது. அவசர நிலை காலத்தின் போது ஜனநாயகத்தின் பக்கம் உறுதியாக நின்றதால் இரட்டை தணிக்கை முறையை எதிர்கொண்டது தீக்கதிர்.1991ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது எதிரிகளால் மதுரை தீக்கதிர் அலுவலகம்தீக்கிரையாக்கப்பட்டது. தோழர்கள் தாக்குதலுக்குள்ளானார்கள். அன்றைக்கும் கூட தீக்கதிர் தனது பயணத்தை நிறுத்திக் கொள்ளவில்லை.

இன்றைக்கு கருத்துச் சுதந்திரத்தின் மீது கட்டாரி பாய்ச்சப்படுகிறது. இடதுசாரிகளின் குரலை ஒடுக்கிவிட முயல்கிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்கள் நமது ஏட்டிற்கு தரப்படுவதில்லை. அரசியல் பாரபட்சமின்றி விளம்பரங்கள் தரப்பட வேண்டும் என்று பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தபோதும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் அதைமதிக்கத் தவறுகின்றனர். காகிதம், மை உள்ளிட்ட இடுபொருள் செலவுகள் கிடுகிடுவென உயர்கின்றன. பெரும் பத்திரிகை நிறுவனங்கள் கூட சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.

ஆனாலும் அரசியல் உறுதி எனும் பின்புலத்துடன் களத்தில் போராடும் தோழர்களின் தோள் மீது சாய்ந்துகொண்டு கருத்துக் களத்தில் போராடுகிறது தீக்கதிர் ஏடு.சென்னையில் துவக்கப்பட்ட இந்த ஏடு பின்னர் மதுரைக்கு மாற்றப்பட்டது. தற்போது மதுரை, சென்னை, கோவை, திருச்சி என நான்குபதிப்புகளாக வெளிவருவதோடு, திசைகளை தாண்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக எண்மப்பதிப்பும் வாசகர்களின் பேராதரவோடு வெளிவந்து கொண்டிருக்கிறது. தீக்கதிரில் பணியாற்றிய, பணியாற்றிக் கொண்டிருக்கிற ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பும், ஈடுபாடும் மட்டுமே இந்தப்பயணத்தை சாத்தியமாக்கியுள்ளது.

அலுவலகத்தில் பணியாற்றுகிற தோழர்கள் மட்டுமின்றிமுகம் தெரியாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் முகவர்கள் இந்த ஏட்டின் வேர்கள்.தீக்கதிரை காப்பாற்றிக்கொண்டிருக்கும் அனைவரது கைகளையும் இந்நாளில் இறுகப்பற்றிவாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவிக்கிறது தீக்கதிர். கார்ப்பரேட் நிறுவனங்களின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டால் கலர் கலராய் மின்னியிருக்க முடியும். ஆனால் இது உழைக்கும் மக்களின் பக்கமும் உண்மையின் பக்கமும் மட்டுமே நின்று வந்திருக்கிறது. இனியும் அப்படித்தான் நிற்கும். இது உண்டியல் குலுக்கிகள் நடத்தும் ஏடு. அதுதான் எங்களுக்குப் பெருமை.

Leave a Reply

You must be logged in to post a comment.