திருவண்ணாமலை:
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை இழிவுப்படுத்தி கைது செய்த காவல்துறையினரை கண்டித்து போராட்டம் நடத்தச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை அராஜகமான முறையில் போலீசார் கைது செய்தனர்.

சேலம்-சென்னை 8வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 26ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு கலந்து கொண்டார். அவரை போலீசார் மோசமான முறையில் நடத்தியதோடு அவதூறாக பேசி இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், வட்டச்செயலாளர் லட்சுமணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணி உள்ளிட்டோர் வெள்ளியன்று (ஜூன் 29) செங்கம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்கள் சாலையில் அமைதியாக அமர்ந்தனர். இதனையடுத்து தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், டில்லிபாபு கைது சம்பவம் தொடர்பாக பிறகு பேசிக் கொள்ளலாம் என்றனர். ஆனால் அதனை தலைவர்கள் ஏற்கவில்லை. அச்சமயம் காவல்துறையினருக்கு தொலைபேசியில் வந்த உத்தரவையடுத்து, சாலையோரம் அமர்ந்திருந்த அனைவரையும் கைது செய்யப் போவதாகவும், அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு வந்துள்ளதாகவும் கூறி அனைவரையும் அராஜகமான முறையில் இழுத்தும், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.இரவு கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதாக போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்க மறுத்த தலைவர்களும், ஊழியர்களும் மண்டபத்திற்குள்ளே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: