புதுதில்லி;
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையை எளிதாக்க 28 சதவிகித வரி வரம்பு நீக்கப்பட வேண்டும் என்று, அண்மையில் தனது பொருளாதார ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் சுப்ரமணியன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டு வரும் நோக்கில் 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி மத்திய அரசால் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறவுள்ள நிலையில் ஜிஎஸ்டி வரித் தாக்கலில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதோடு வரி விகிதங்கள் மிகவும் அதிகமாக இருப்பதாகப் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மேலும் ஆடம்பரப் பொருட்களுக்குக் கூடுதல் செஸ் வரிகள் விதிக்கப்படுவதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இதுதொடர்பாக அண்மையில், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் சுப்பிரமணியன், தனது கருத்துக்களை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டிற்காக பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என்னைப் பொறுத்தவரையில் முறையான ஜிஎஸ்டி கட்டமைப்புக்கு 28 சதவிகித வரி வரம்பை நீக்கிவிட்டால் சரியாக இருக்கும். ஆனால், செஸ் வரிகள் இருந்தாக வேண்டும். ஏனெனில் சில பொருட்களுக்குக் கூடுதல் கட்டணம் விதிக்க வேண்டியுள்ளது. நான் தாக்கல் செய்திருந்த அறிக்கை ஒன்றில் 18 சதவிகிதம் மற்றும் 40 சதவிகிதம் வரி வரம்புகள் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தேன்.

அந்த 40 சதவிகித வரி வரம்பை செஸ் வரிகள் ஈடு செய்யும்.இப்போது ஜிஎஸ்டி-யில் 0 சதவிகிதம், 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் ஆகிய ஐந்து அடுக்கு வரி முறை உள்ளது. மேலும், தங்கத்துக்கு 3 சதவிகித செஸ் வரியும், வைரத்துக்கு 0.25 சதவிகித செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. 28 சதவிகித வரி வரம்புக்குள் வரும் ஆடம்பரப் பொருட்களுக்கு 1 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரையில் கூடுதல் செஸ் வரி விதிக்கப்படுகிறது. எனவே, ஜிஎஸ்டி அமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமானால் 28 சதவிகித வரி வரம்பைத்தான் நீக்க வேண்டும்.
இவ்வாறு அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: