கோவை,
கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமையை அந்நிய கார்ப்ரேட் நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

பிரெஞ்சு நாட்டினை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்டதை கண்டித்து, சிபிஎம் உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கட்சியின் மாநில துணைச்செயலாளர் சுப்பராயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் சூயஸ் நிறுவனத்திற்கு மக்கள் கருத்தை கேட்காமல் குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்டு இருப்பதை கண்டித்தும், எதிர்காலத்தில் அதிக விலை கொடுத்து குடிநீரை பெற வேண்டிய அவலம் உருவாகுமென்றும், சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டுமெனவும், இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சுப்பராயன், சிபிஐ மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.