திருப்பூர்,
சமூகநீதியைத் தகர்க்கும் விதத்தில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை, செல்லாததாக மாற்றுவதற்கு உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் இணைக்கவும் வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் இரு நாள் பரப்புரை பயணம் வெள்ளியன்று தொடங்கியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலித் அமைப்புகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் ஜூலை 2ஆம் தேதி இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை விளக்கி வெள்ளி, சனி இருநாட்கள் இந்த பரப்புரை இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளியன்று காலை காங்கயம் பேருந்து நிலையத்தில் இந்த பரப்புரை இயக்கம் தொடங்கியது. இதையடுத்து வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் ஆகிய பகுதிகளில் பரப்புரை செய்யப்பட்டது.

இந்த பரப்புரை இயக்கத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தொடக்கி வைத்தார். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.என்.நடராஜ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ராதேவி, மாதர் சங்க காங்கயம் ஒன்றியச் செயலாளர் ருக்மணி, தலித் விடுதலை இயக்கம் இணைப் பொதுச்செயலாளர் ச.கருப்பையா, ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை நிறுவனத் தலைவர் அ.சு.பவுத்தன், மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கயம் தாலுகா செயலாளர் திருவேங்கடசாமி, தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ், தவிச மாவட்டக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, தாராபுரம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தாலுகா தலைவர் மேகவர்ணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெள்ளியன்று பிற்பகல் குண்டடம் பேருந்து நிறுத்தம், கொடுவாய், பொங்கலூர், பல்லடம், மேற்கு பல்லடம், காளிவேலம்பட்டி, கரைப்புதூர் ஆகிய பகுதிகளிலும் பரப்புரை செய்யப்பட்டது. சனியன்று அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் இந்த பரப்புரை இயக்கம் நடைபெற உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: