====க.சுவாமிநாதன்====
மத்திய அரசின் “மெகா வங்கி மறு மூலதனத் திட்டம்” தோல்வியடைந்துள்ள பின்னணியில் ஐடிபிஐ பங்குகளை ரூ.20,000 கோடி அளவில் எல்ஐசி வாங்குவதற்கான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளது. இது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. “தி வயர்” ஆங்கில ஆன்லைன் இதழில் வெளி வந்துள்ள ஓர் கட்டுரை இதுகுறித்து விவாதிக்கிறது. அதன் சில பகுதிகள்…

ஏன் எல்ஐசியை நாடுகிறார்கள்?
எல்ஐசி அசுர வளர்ச்சியை அடைந்துள்ள நிறுவனம். ஆயுள் காப்பீட்டுச் சந்தை போட்டிக்காகத் திறந்துவிடப்பட்டு 20 ஆண்டு கழித்தும் தனியார்கள், அந்நிய நிறுவனங்களை எதிர்கொண்டு 71சதவீதம் சந்தைப் பங்கை எல்ஐசி வைத்துள்ளது. அதாவது “மொத்த முதலாண்டு பிரிமிய வருவாயில்” – புதிய பாலிசிகளில் பாலிசிதாரர்கள் செலுத்துகிற தொகையில் இவ்வளவு சதவீதத்தை எல்ஐசி கவர்ந்துள்ளது.ஒவ்வோராண்டும் எல்ஐசி 2 கோடி புதிய பாலிசிகளையும் விற்பனை செய்கிறது. மொத்தத்தில் அது 25 கோடி மக்களுக்கான 30 கோடி பாலிசிகளை நிர்வகித்து வருகிறது. ஆண்டு பிரிமிய வருவாய் 3 லட்சம் கோடிகளைத் தொட்டுள்ளது. 30 லட்சம் கோடி சொத்துக்களோடு வலிமையான இருப்பு நிலை அறிக்கையைக் கொண்டுள்ளது. மூலதனச் சந்தையில் 2 லட்சம் கோடியிலிருந்து 2.5 லட்சம் கோடிகள் வரை முதலீடுகளைச் செய்ய முடிகிறது. அதனால் அரசைப் பொறுத்தவரையில் அதற்கு தேவைப்படும் போது நிதியாதாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏடிஎம் போல எல்ஐசி பயன்படுத்தப்படுகிறது.

அரசு ஏடிஎம் போல பயன்படுத்துகிறது என்பதற்கு உதாரணங்கள் உண்டா?
கடந்த 4 ஆண்டுகளில் இது ரயில்வே துறைக்கு “மென்மைக் கடன்களை” வழங்கியுள்ளது. மின்சாரத்துறைக்கான “உஜ்வால் டிஸ்காம் அஸ்யூரன்ஸ் யோஜனா” பத்திரங்களிலும், தேசிய முதலீடுகள், ஆதாரத் தொழில் வளர்ச்சி நிதியத்திலும் முதலீடுகளைச் செய்துள்ளது. மத்திய அரசின் பங்கு விற்பனைத் திட்டத்தின் மிக முக்கியக் கூட்டாளியாகவும் எல்ஐசியை வைத்துள்ளார்கள்.

தற்போது ஐடிபிஐ வங்கியில் எவ்வளவு தொகையை எல்ஐசி முதலீடு செய்யப் போகிறது?
2015, 2016 ஆம் ஆண்டுகளிலேயே பல பொதுத்துறை வங்கிகளுக்கு எல்ஐசி ஆதரவுக் கரம் நீட்டியது. அவர்களுக்கு மூலதனத் தேவை எழுந்தபோதும், முன்னுரிமைப் பங்குகள் வெளியீட்டின் மேலும் அவ்வங்கிகளுக்கு எல்ஐசியின் நிதிப் பங்களிப்பு பேருதவியாய் இருந்தது. இத்தகைய கடந்த கால முதலீடுகளின் மூலம் தற்போதே ஐடிபிஐயில் எல்ஐசி 11 சதவீத பங்குகளை வைத்துள்ளது. தற்போது எல்ஐசி எவ்வளவு பங்குகளை வாங்கப்போகிறது என்பதில் குழப்பங்கள் உள்ளன. 30 சதவீதத்தை வாங்குவதன் மூலம் அதன் மொத்த பங்கு அளவை 40 சதவீதத்திற்கு கொண்டு வரக்கூடும் என்றும், 51 சதவீதம் வரையிலான அரசின் மொத்த பங்குகளையும் எல்ஐசி வாங்கிக் கொள்ளுமென்றும் ஊடகச் செய்திகள் சற்று வேறுபட்டு வந்த வண்ணம் உள்ளன. எப்படியேனும் ரூ.8000 கோடியிலிருந்து ரூ.12,000 கோடி வரை அம்முதலீடுகள் இருக்கக்கூடும்.

 இத்தொகை ஐடிபிஐ வங்கிக்கு போதுமானதா?
எல்ஐசி இப்பங்குகளை வாங்குவதற்கு தருகிற தொகை ஐடிபிஐ வங்கிகு போகப் போவதில்லை. அரசின் பங்குகளை வாங்குவதால் அரசிற்கே கிடைக்கும். இதற்கு மேலும் ஐடிபிஐ வங்கிக்கு தங்கள் கணக்குகளைச் சுத்தம் செய்யவும், மூலதன வரையறைகளைக் கடைப்பிடிக்கவும் ரூ.10,000 கோடிகளிலிருந்து ரூ.13,000 கோடிகள் வரை தேவைப்படலாம். இதனால் முதல் சுற்றிலேயே எல்ஐசி ரூ.20,000 கோடிகளை எடுத்து வைக்க வேண்டி வரலாம்.

எல்ஐசி இவ்வளவு பெரிய தொகையை ஐடிபிஐ வங்கியில் போடுவது நல்ல முடிவா?
ஒரு நிதித்துறை ஆய்வாளர் கூறுவது போல ரூ.20,000 கோடிகளை எல்ஐசி இதற்காக எடுத்து வைப்பது கால்வாயில் ஓடுகிற தண்ணீர் போன்றதுதான்! ஏன்? மோசமான நிலையில் உள்ள அரசு வங்கிகளுக்குள்ளேயே கூட ஐடிபிஐ வங்கியின் நிலைமை மிகக் கீழாக உள்ளது.

மார்ச் 2017ல் ரூ.44,753 கோடிகளாக இருந்த செயல்படா சொத்துக்கள் மார்ச் 2018ல் 55588 கோடிகளாக உயர்நதுள்ளது. இது மொத்தக் கடன்களில் 28 சதவீதம் ஆகும். (வேறு எந்த வங்கியையும் விட இச்சதவீதம் மிக அதிகம்) “இந்தியா ரேட்டிங்” என்கிற கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் ஆய்வுப்படி தற்போது தரமான சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட, ஆனால் சிக்கல்கள் உள்ளவற்றையும் சேர்த்தால் இச்சதவீதம் 36 சதவீதத்தைக் கூட தொடலாம் என்பதே. மார்ச் 2018ல் முடிந்த காலாண்டில் இதன் நட்டங்கள் ரூ.5663 கோடிகள். மார்ச் 2017ல் நட்டம் ரூ.3200 கோடிகளாக இருந்தது.அடுத்த மூன்றாண்டுகளுக்கு பணத்தை உறிஞ்சும் கருந்துளையாக ஐடிபிஐ இருக்கப் போகிறது. கடந்த நிதியாண்டில் ரூ.10,000 கோடி மூலதனத்தை அரசு போட்டும் கூட இதன் மூலதனம் குறைந்தபட்சத் தேவையான 7.375 சதவீதத்தை முழுநேர சிஇஓவோ, மேனேஜிங் டைரக்டரோ கிடையாது. ரிசர்வ் வங்கியும் நெறிப்படுத்துவதற்கான உரிய வேக நடவடிக்கையை “2021 வரை எடுக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. ஆகவே ஐடிபிஐ முதலீடு, இர்களைக் கொண்டதாகும்.

எல்ஐசி என்கிற சமுத்திரத்திலிருந்து எடுக்கப்படுகிற துளிகள்தானே ஐடிபிஐ முதலீடுகள் என்று வாதம் வைக்கப்படுகிறது?
2017 நிதியாண்டில் எல்ஐசி 1.8 லட்சம் கோடிகளை முதலீட்டு வருவாயாக ஈட்டியிருக்கிறது. ஐடிபிஐக்கு முதற்கட்டமாக ரூ.20,000 கோடியும், பின் தவணைகளில் ரூ.10,000 கோடி இரண்டு மூன்று ஆண்டுகளிலுமாகத் தானே தரப் போகிறது. ஜிண்டால் சர்வதேச வணிகம் பற்றி பேராசிரிய்ர இராஜேஷ் சக்ரவர்த்தி “எல்ஐசி பிரம்மாண்டமானது. ஐடிபிஐ முதலீடு போன்ற அளவிலானவை அதன் நிலைத் தன்மையைப் பாதிக்காது” என்கிறார்கள். பல அரசு அதிகாரிகளும இவ்வாதத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் இரண்டு அம்சங்களைக் கணக்கில் கொள்ளவில்லை.

என்ன விளைவுகள் உருவாகலாம்?
ஒன்று, எல்ஐசியின் இருப்பையோ, பாலிசிதாரர் நிதியையோ காலி செய்கிற அளவுக்கு ஐடிபிஐ முதலீடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நல்ல பணத்தை தவறான இடங்களுக்குத் தூக்கியெறிகிற முடிவு என்பதை மறுக்க முடியாது.இரண்டாவது, அமைப்பு சார்ந்த கேள்விகள். எல்ஐசி போன்ற பெரும் நிறுவனங்களை வங்கித் துறைக்குள் அனுமதிக்கப் போகிறார்களா? 2015, 2016ல் எல்ஐசி அரசு வங்கிகளின் முன்னுரிமைப் பங்குகளில் முதலீடு செய்த போது ரிசர்வ் வங்கி சொன்னது என்ன?
“இது தொற்று நோய். ஒன்றுக்கொன்று தொடர்புடைய இடர். ஒரு வேளை வங்கித்துறை இறங்குமுகத்திற்கு ஆளானால் எல்ஐசியின் மதிப்பும் அழிக்கப்படும். இது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிதாரர்களுக்கான கட்டுப்பாட்டை, அதற்கான வலுவை பாதிக்கும்”.
– ரிசர்வ் வங்கி துணை கவர்னர் முந்த்ரா 2015 ரிசர்வ் வங்கியும், முந்த்ராவும் அரசு வங்கிகள் ‘எளிதான மூலதனத்திற்கு’ எல்ஐசியை நம்பியிருப்பது தார்மீக இடர் என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ஏன் அரசாங்கம் இந்த ‘டீலை’ செய்கிறது?
ஒரே கல்லில் இரண்டு பறவைகளை மோடி அரசு வீழ்த்துகிறது. ஐடிபிஐ வங்கி சுமக்கிற செயல்படா சொத்துக்களைச் சேர்ந்து தாங்குவதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது. அவ்வங்கிக்கான மூலதனத் தேவையை நிவர்த்தி செய்வதிலிருந்தும் தப்பித்துக் கொள்கிறது.
இரண்டாவது பறவை, அதன் பங்கு விற்பனை இலக்கு. 2016 பட்ஜெட் வரையிலேயே ஐடிபிஐ பங்குகளில் 50 சதவீதத்தை விற்பதென்று அருண்ஜெட்லி அறிவித்தாலும் அதில் முன்னேற்றம் இல்லை. பிரதமர் அலுவலகமும் நிதியமைச்சகத்தை நெருக்கியுள்ளது. எல்ஐசியை உள்ளே இறக்கிவிடுவதால் அப்பிரச்சனையும் தீர்ந்துவிடும். மத்திய அரசின் பங்கு விற்பனை இலக்கான ரூ.80,000 கோடியை எட்டவும் வழி பிறக்கும்.

ஐஆர்டிஒ இந்த டீலை அனுமதிக்குமா?
ஐடிபிஐ வங்கி தேசியமயச் சட்டத்தின் கீழ் வராது என்பதால் அது பங்குகளை விற்பதற்கு சட்டரீதியாகத் தடையில்லை.எல்ஐசியின் முதலீடுகள் பிற நிறுவனங்களில் 15 சதவீதத்தை மிகக் கூடாது என்பது ஐஆர்டிஒவின் விதிமுறை. இதன் பொருள் எல்ஐசி 51 சதவீத அளவிற்கு ஐடிபிஐ பங்குகளை வாங்க முடியாது. ஆனால் எல்ஐசி சட்டம் 1956, ஐஆர்டிஒ சட்டம் 1999க்கு முந்தையது என்பதால் அதன் வாயிலாக இதைச் செய்வதற்கு பொந்துகள் உள்ளன என்பது சட்ட நிபுணர்களின் கருத்து. இல்லாவிட்டாலும் ஐஆர்டிஒ இயக்குநரை அடுத்து கூடும்போது இதைப் பற்றி பேசி விதிவிலக்கு வழங்கக்கூடும்.

Leave a Reply

You must be logged in to post a comment.