திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் முறைகேட்டை அம்பலப்படுத்தி போராட்டம் நடத்தியதால், வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆதிக்க சக்தியினரின் தூண்டுதலின்பேரில் வஞ்சகமாக புனையப்பட்ட இந்த வழக்கில் இருந்து வாலிபர் சங்கத்தினர் ஆறு பேரும் நிரபராதிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சியில் கடந்த 2015 -16ஆம் ஆண்டு தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பெருமளவு ஊழல் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இம்மோசடியில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு அதிகாரிகளிடம் விவசாயத் தொழிலாளர் சங்கம், வாலிபர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அத்துடன் மோசடியில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி வி.வல்லகுண்டாபுரத்தில் விவசாயத் தொழிலாளர் மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விருகல்பட்டி ஊராட்சி செயலர் பாலமுருகன் தூண்டுதலின்பேரில் சிலர்உள்ளே புகுந்து தகராறு செய்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்தபின், சங்கத்தின் சார்பில் ஊராட்சி செயலர் பாலமுருகன், வாட்டர்மேன் சக்திவேல் மற்றும் மணியன் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் பாலமுருகன் வழிகாட்டலில் அவரது ஆதரவாளர்கள் மூன்று பேர் பொய்யான முறையில் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து கொண்டு, வாலிபர் சங்கத்தினர் மீதுவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், மணிகண்டன், ஞானப்பிரபு, மகேந்திரன், கார்த்திக், ரவிச்சந்திரன் ஆகிய ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவில் குடிமங்கலம் காவல் நிலையத்தில் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து காவல்துறைஉயர் அதிகாரிகளிடம் முறையிட்டபோதும், பொய் வழக்கை ரத்து செய்வதற்கு மாறாக, இயக்கத்தின் முன்னணி தலைவர்களையும் வழக்கில் சேர்ப்பதற்கு சதிச் செயல் நடைபெற்றது. இதை கண்டித்து உடுமலைபேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பிரம்மாண்டமான கண்டன இயக்கமும் நடத்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமை கொடுமை, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக உறுதியான முறையில் போராடி வரும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீதே வன்கொடுமை வழக்கைப் பதிவு செய்தநிலையில், இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் எஸ்.பொன்ராம், வழக்கறிஞர் சிவக்குமார் ஆகியோர் வாலிபர் சங்கத்தினருக்கு ஆதரவாக வாதாடினர். இந்த வழக்கு விசாரணை முடிந்து வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பு வழங்கினார். இதில் வன்கொடுமை சட்டப்பிரிவில் புனையப்பட்ட வழக்கில் இருந்து வாலிபர் சங்கத்தினர் ஆறு பேரையும் நிரபராதிகள் என நீதிபதி அல்லி விடுவித்து தீர்ப்பளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: