திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை (வளர்மதி) கட்டுப்பாட்டில் செயல்படும் 115 நியாயவிலைக் கடைகளில் 50 நியாயவிலைக் கடைகளை மற்ற கூட்டுறவு சங்கங்களுக்குப் பிரித்து வழங்கும்படி திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க நிர்வாகக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் கே.மகேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன், மாவட்டப் பொதுச்செயலாளர் ப.கௌதமன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட தீர்மானத்தில், குறிப்பாக இந்த வளர்மதி கூட்டுறவு சங்கத்துக்கு அரசு தர வேண்டிய மானியம் நிலுவையாக இருப்பதால், பணியாளர்களுக்கு ஊதியம், பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட பணப் பயன்களை முறையாக கொடுக்க இயலாத நிலை தொடர்கிறது. எனவே இந்த கடைகளை பிற கூட்டுறவு சங்கங்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும் என்றும் சிஐடியு கேட்டுக் கொண்டுள்ளது. செட்டிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க செயலாளர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கூட்டுறவு இணைப் பதிவாளர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 6ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: