திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் பெற்ற மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி குழந்தை பெறச் செய்த கொடூர தந்தைக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றம் 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

காங்கயம் அருகே ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் எபிநேசன் துரைராஜ் (44). வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனையால் மனைவி இவரை விட்டுப் பிரிந்த நிலையில் முதல் மகள் அம்மாவுடன் சென்றுவிட்டார். 13 வயதான இரண்டாவது மகள் அப்பா எபிநேசனுடன் இருந்தார். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த 13 வயது மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில் இந்த விபரம் அரசின் கவனத்துக்குத் தெரியவந்தது. பிறந்த குழந்தையை சேலம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதுபற்றி அந்த சிறுமியிடம் விசாரித்ததில், அவரது தந்தை எபிநேசன் துரைராஜ் பல மாதங்களாக மகளிடம் பாலியல் வல்லுறவு கொண்டதும், இதனால் கர்ப்பமானதும் தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டப்பிரிவு 5 (எல்), 5 (என்) மற்றும் 5 (ஆர்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை வியாழனன்று நடைபெற்றது. இதில் எபிநேசன் துரைராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மேற்கண்ட ஒவ்வொரு பிரிவின் கீழும் தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் மொத்தம் மூன்று ஆயுள் தண்டனைகளும், தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: