திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி பெரியார் காலனி பகுதியில் மீன் மற்றும் கோழி வியாபாரிகளை காலி செய்யுமாறு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் காவல் துறையினருடன் வந்து கூறியுள்ளனர். அவர்களுக்கு அந்த இடத்தில் வாரத்தில் இரு நாட்கள் மட்டும் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன் மாவட்ட ஆட்சியருக்கு வியாழனன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் அவிநாசி சாலை பெரியார் காலனி அருகில் தார் சாலை ஓரத்தில் ஞாயிறு, புதன் என வாரத்தில் இரு நாட்கள் மட்டும் மீன் மற்றும் கோழிக்கறிக் கடைகள் காலை முதல் மதியம் 2 மணி வரை சாலையோர வியாபாரமாக நடைபெற்று வருகிறது. இந்த இரு நாட்கள் வியாபாரத்தை நம்பிதான் அந்த சாலையோர வியாபாரிகள் பிழைத்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் இந்த வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், காவல் துறையினர் துணையுடன் கடந்த 26ஆம் தேதி மதியம் அங்கு வந்து மேற்படி கடை வைத்துள்ள நபர்களை அப்புறப்படுத்தும்படி கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த கடைகளை நடத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏதும் இல்லை.

எனவே மேற்படி இடத்தில் சாலையோர மீன் கடை, கோழிக்கறிக் கடை வைத்து வாரத்தில் இருநாட்கள் மட்டும் காலை முதல் மதியம் 2 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் வியாபாரம் செய்வதற்கு அந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.