திருப்பூர்,
திருப்பூர் அருகே புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர், பல்லடம் காரணம்பேட்டையில் இருந்து சின்ன கோடங்கிபாளையம் செல்லும் பாதையில் டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல் தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சின்னகோடங்கிபாளையம் செல்லும் காட்டுப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் ஏற்கனவே மனு கொடுத்து இருந்தனர். ஆனாலும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, புதனன்று திடீரென்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அந்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று முழக்கமிட்டனர். இது பற்றிய தகவலயறிந்த பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் ‘‘சின்னகோடங்கிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். மேலும் இந்த வழியாகத்தான் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ–மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் சென்று வருகிறார்கள். அப்போது தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.அப்போது டாஸ்மாக் கடை வேண்டாம் என்று மனு கொடுங்கள் உரிய அதிகாரியிடம் பேசுகிறேன் என்று துணை காவல் கண்காணிப்பாளர் கூறினார். அதன்படி பொதுமக்கள் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.