ஸ்ரீநகர்:
காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியை உடைக்கும் சதித் திட்டத்தில் பாஜக இறங்கியிருப்பதாக, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
காஷ்மீர் சட்டப்பேரவையில் நாங்கள் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறோம். ஆனால், நாங்கள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை. கடந்த தேர்தலில் மக்கள் எங்களுக்கு வாக்களிக்காத போது, ஆட்சியமைக்க முயல்வது சரியாக இருக்காது. ஏற்கெனவே பிடிபி- பாஜக கூட்டணி தோல்வி அடைந்துள்ள பின்னணியில், புதிதாக அமையும் கூட்டணியையும் மக்கள் சந்தேகத்துடனேயே அணுகுவார்கள்.எனினும் நாங்கள் ஒரே ஒரு தவறு செய்து விட்டோம். வெறுமனே ஆளுநர் ஆட்சியை கோரியதற்குப் பதில், சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு ஆளுநர் ஆட்சியை அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.

ஏனெனில், சட்டப்பேரவை கலைக்கப்படாததால், மக்கள் ஜனநாயக கட்சிக்குள் பிளவை உருவாக்கி, அவர்கள் மூலம் மீண்டும் அதிகாரத்திற்கு வர பாஜக தற்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான், சட்டப்பேரவையைக் கலைக்க வேண்டும் என்று இப்போது வரை அந்த கட்சி வலியுறுத்தாமல் உள்ளது.இவ்வாறு உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: