திருப்பூர்,
திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்,

திருப்பூர் கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவமூர்த்தி (47). பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி துர்கா வைஷ்ணவி. இவர்களுக்கு 3 வயதில் மகள், 1 வயதில் மகன் உள்ளனர். சிவமூர்த்தி முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரத்தின் மனைவியின் தங்கையான பத்மினியின் மருமகன் ஆவார். இந்நிலையில் சிவமூர்த்தி கடந்த திங்கட்கிழமையன்று (ஜூன் 25) காலை கோவைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது சொகுசு காரில் புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பிறகு இரவு அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போன்களும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை சின்னசாமி, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில்சிவமூர்த்தி தனது காரில் ஜி.பி.ஆர்.எஸ்.கருவி பொருத்தியிருந்ததால், அதனை வைத்து திருப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது சிவமூர்த்தியின்கார் ஆம்பூர் அருகே உள்ள வெங்கிளிபகுதியில் செவ்வாயன்று நள்ளிரவு சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே திருப்பூர் காவல் துறையினர் வேலூர் காவல்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வேலூர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆம்பூர் அருகே வெங்கிளி என்ற இடத்தில் சிவமூர்த்தியின் காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்த விமல் (35), கவுதமன் (22), மணிபாரதி (22) என்பது தெரியவந்தது. இவர்கள் தொழிலதிபர் சிவமூர்த்தியை கடத்திச் சென்று கொலை செய்து, சடலத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெளவரப்பள்ளி அணையில் கல்லைக் கட்டி வீசிச்சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்ததுடன், சிவமூர்த்தியின் உடலை அணையில் இருந்து மீட்டனர். இதற்கிடையே, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூர்த்தி (35) என்பவரை, கோவை காரமடையில் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து நான்கு பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியபின், விமல், மணிபாரதி, கவுதமன் ஆகியோரை மட்டும் புதனன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக திருப்பூர் ஜே.எம்.எண்-1நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர். ஆனால், மூர்த்தி அழைத்து வரப்படவில்லை. இதையடுத்து திடீரென அவர்களை மீண்டும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதன்பின்னர் மீண்டும் மாலை 5.30 மணிக்கு, விமல், மணிபாரதி, கவுதமன் ஆகியோருடன் மூர்த்தியையும் அழைத்து வந்த காவல் துறையினர், நீதிபதி கவியரசு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கவும், மீண்டும் ஜூலை 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரையும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: