திருப்பூர்,
திருப்பூர் பின்னலாடை ஜவுளித் தொழிலைக் காப்பாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழனன்று மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தமிழகத்தில் உற்பத்தியாகிறது. குறிப்பாக திருப்பூரில் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு பின்னலாடை ஏற்றுமதி நடைபெறுகிறது. ஏறத்தாழ 6 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். எனினும் கடந்த 10 ஆண்டு காலமாக பல்வேறு காரணங்களால் இத்தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக உலக சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியில் இந்தியா கடும் சவாலைச் சந்திக்கிறது.

எனவே பின்னலாடை தொழிலுக்கு குறைக்கப்பட்ட டூட்டி டிராபேக் ஊக்கத் தொகையை 2 – 2.5 சதவிகிதம் என்பதில் இருந்து 5 சதவிகிதமாக ஆவது உயர்த்த வேண்டும். ஏற்றுமதி கடனுக்கான வட்டி விகிதத்தை 5 சதவிகிதம் வரை சலுகை வழங்க வேண்டும், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பிரதான சந்தை நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் முக்கியமான வேலைவாய்ப்பு வழங்கி வரும் திருப்பூர் ஜவுளி நகரம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி மத்திய அரசின் கவனத்துக்குக் கடிதம் எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக மிகக் கடும் நெருக்கடி சூழ்நிலையை திருப்பூர் சந்தித்து வருகிறது. இது இங்குள்ள தொழில் துறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் எவ்வித கவனமும் செலுத்தாமல் இருக்கின்றன என்ற விமர்சனம் உள்ளது. இந்த பின்னணியில் முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார். இந்த தொழில் பிரச்சனைகள் தொடர்பாக வலுவான குரல் எழுப்ப வேண்டிய திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் இதுவரை வெளிப்படையாக எவ்வித தெளிவான, உறுதியான நிலைபாட்டையும் எடுக்கவில்லை. எனினும் முதல்வர் கடிதம் எழுதியிருப்பதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளது.

(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.