தாராபுரம்,
தாராபுரத்தில் வாகன ஆய்வாளர் இல்லாதால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விபத்து வாகனங்கள் முடங்கி கிடப்பதால் வழக்குகள் கடும் பாதிப்படைந்துள்ளது.

தாராபுரம் வட்டாரபோக்குவரத்து அலுவலகம் புறவழிச்சாலை ஜஸ்வர்யா நகரில் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்டாரபோக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், இளநிலை, முதுநிலை என இருவர் பணி செய்து வந்தனர். இதில் இளநிலை ஆய்வாளர் பணி மாறுதலில் சென்றுவிட்டார். இந்நிலையில்,முதுநிலை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஓட்டுனர் உரிமம், புது வானங்கள் பதிவு, ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், விபத்து வாகனங்களை மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒன்னரை மாதமாக வட்டாரபோக்குவரத்து அலுவலர் மருத்துவ விடுப்பில் இருப்பதால், முதுநிலை மோட்டார் வாகன ஆய்வாளரே அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட குண்டடம், அலங்கியம், மூலனூர், தாராபுரம் பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் சேதமடையும் வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு செய்து அறிக்கை வழங்க வேண்டும். இதன் பின்புதான் காவல்நிலையங்களில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்ய இயலும். இதற்கென தலைமைக்காவலர்கள் வாகனங்களை வட்டாரபோக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் போது பணிச்சுமையின் காரணமாக மோட்டார் வாகன ஆய்வாளர் விபத்து வழக்கு வாகனங்களை நாளை பார்க்கிறேன் என காலம் கடத்தி திருப்பி அனுப்பிவிடுகிறார். இதனால் தலைமை காவலர்கள் வட்டாரபோக்குவரத்து அலுவலகத்திற்கும், காவல்நிலையத்திற்கும் அலைகழிக்கப்படுகின்றனர்.

மேலும், விபத்து வழக்குகளில் காலதாமதம் ஏற்படுவதால் நஷ்ட ஈடு பெறுவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் சிரமப்படுகின்றனர். விபத்து வழக்குகளை முடித்து அபராதம் செலுத்தி வாகனங்களை திரும்ப பெற இயலமால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளகின்றனர். எனவே, மோட்டார் வாகன ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என காவல்துறை மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.