கோவை,
சூயஸ் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகர மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீரை எதிர்வரும் 26 ஆண்டுகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பை ரூ.3 ஆயிரத்து 150 கோடிக்கு சூயஸ் என்ற பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக கோவை மாநகர மக்கள் குடிநீருக்கு தனியாரிடம் கையேந்த வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது கோவை மாநகர மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் வியாழனன்று மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் வழங்கும் உரிமையை ரத்து செய்யக்கோரி மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்தி கேயனிடம் மனு அளித்தனர்.

இம்மனுவில் கூறியிருப்பதாவது, மக்கள் கருத்துகளை கேட்காமல் குடிநீர் விநியோகிக்கும் உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு ரகசியமாக வழங்கப்பட்டு உள்ளது. இதனை கண்டிப்பதுடன், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் மக்கள் பிரதிநிதிகள் ஒப்புதல் இல்லாமல் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதேபோல் சூயஸ் நிறுவனத்துடனான மாநகராட்சி செய்து கொண்ட ஒப்பந்தத்தின் நகலையும், வேலை உத்தரவின் நகலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவை மாநகர மக்களிடம் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ள இத்திட்டம் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரை திரும்பப்பெற வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: