திருப்பூர்,
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் திருப்பூர் மாநகரில் குப்பைகள் மலை போல் தேங்கி குப்பை மாநகரமாகத் திகழ்கிறது. இப்பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சொத்து வரியை அநியாயமாக உயர்த்தியுள்ளதை ரத்து செய்யவும், குப்பைகளை அகற்றி சுகாதாரம் பேணவும், குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணவும், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளைச் செப்பனிடவும் வலியுறுத்தியும், மனை வரன்முறை கட்டணம் என அநியாய பண வசூலை கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி, வடக்கு மாநகரச் செயலாளர் பி.முருகேசன், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் மாநகராட்சியின் அவலங்களை விளக்கி உரையாற்றினர்.

குறிப்பாக மாநகரில் நாளொன்றுக்கு சுமார் 700 டன் குப்பை உற்பத்தி ஆகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை அகற்ற உரிய ஏற்பாடு இல்லாமல் சுற்றிலும் உள்ள கிராமப்புறங்களில் குப்பைகளைக் கொட்டிச் செல்கின்றனர். கிராம மக்களுக்கும், நகர மக்களுக்கும் மோதல் போக்கை உருவாக்கும் நிலை உருவாகிறது. ஆனால் உருப்படியான திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கடந்த 25 ஆண்டு காலமாக செயல்படுத்தப்படவில்லை. மேலும்,குப்பையில் இருந்து உரம் தயாரிப்பதாகவும், மின்சாரம், சாணவாயு தயாரிப்பதாக பல திட்டங்களை அறிவித்தாலும் எதுவும் நடைபெறவில்லை. ரூ.1255 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டு காலம் ஆனாலும் அத்திட்ட செயல்பாட்டில் திருப்பூர் மக்களுக்குத் தெரியாமல், அதிகாரிகள் தானடித்த மூப்பாக செயல்படுகின்றனர். வாழ்வாதாரத்துக்காக மக்கள் அன்றாடம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஸ்மார்ட் சிட்டி என வெறுமனே அழகுபடுத்தும் திட்டத்தை அமல்படுத்தினால் போதுமா? மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாகச் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்பட திருப்பூர் ஐந்து இடைக் குழுக்களைச் சேர்ந்த கட்சி அணியினர் ஏராளமானோருடன், பெண்கள் மற்றும் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாடத்தின்முடிவில் மாநகராட்சி ஆணையர் எம்.அசோகனிடம் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள்
கோரிக்கை மனு அளித்தனர்.

உடுமலை:
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழு உறுப்பினர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், நகரக்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், செல்லத்துரை, மாலினி, வசந்தி, தோழன்ராஜா மற்றும் வாலிபர் சங்கத்தின் நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட திராளனோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.