புதுதில்லி;
அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்து உள்ளது.கடந்த ஜூன் 19-ஆம் தேதி அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.61 என்ற அளவிற்கு சரிந்திருந்தது. இது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக கருதப்பட்டது. அதன்பின்னர் சிறிது ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு புதன்கிழமையன்று வர்த்தக நேர முடிவில் 68.61 ஆக நிலைபெற்றது.இந்நிலையில், வியாழக்கிழமையன்று வர்த்தக நேர துவக்கத்தின்போது, மேலும் 28 காசுகள் சரிந்து, 68 ரூபாய் 89 காசுகளாக இருந்த ரூபாய் மதிப்பு, சிறிது நேரத்தில் மேலும் சரிந்து 69 ரூபாய் 10 காசுகள் என்ற நிலையை எட்டியது. இது வரலாறு காணாத சரிவு ஆகும்.
2016-ம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பு 68.73 ரூபாயாக இருந்தது. இந்த அளவுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகபட்ச சரிவாக இருந்தது. தற்போது அதையும் தாண்டி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்தச் சரிவு தொடருவதுடன் 70 ரூபாயைத் தாண்டவும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கி, அந்த நாட்டை தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் தொடக்கமாக, கூட்டணி நாடுகள் அனைத்தும் ஈரானிடமிருந்து நவம்பர் மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று கூறியிருந்தது. இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது என்றும், இதை மீறினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்தியாவுக்கான நிரந்தர முதலீடுகளில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவற்றால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது கடுமையாகச் சரிந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: