கோவை,
கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல, மாறாக, இது அதிமுகவினர் தங்களை வளமைப்படுத்திக் கொள்ள போடப்பட்ட திட்டம் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

கோவை மற்றும் திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதனன்று வந்திருந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவே 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்த திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல. இது அதிமுகவினர் தங்களை வளைமைபடுத்தி கொள்வதற்காக போடப்பட்ட திட்டம் என குற்றம்சாட்டினார். மேலும், வளர்ச்சி திட்டங்களை ஒருபோதும் திமுக எதிர்ப்பதில்லை. ஆனால் மக்களின் கருத்துக்களை கேட்காமல் சேலம்- சென்னை 8 வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 8 வழி பசுமைச்சாலை திட்டம் மக்களுக்கு எதிரான திட்டமாக இருப்பதால் தான் திமுக அதனை எதிர்க்கிறது. அதேநேரம், தமிழகத்தில் எந்த திட்டம் குறித்துவிமர்சித்தாலும் கைது நடவடிக்கை மேற்கொள்வது என்பது எமர்ஜென்சியை காட்டிலும் மோசமான நிலையில் தமிழகம் இருப்பதையே காட்டுகிறது. பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் அரசியல் கட்சிகள் மட்டுமே பேசிவருவதாகவும். பெண்கள் வாழவே தகுதி இல்லாத நாடாக இந்தியா உருவாகி வருவது வேதனையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முரண்பாடுகளுடன் வாழ்வதுதான் வாழ்க்கை. ஆனால் முரண்பாடுகளே ஒரு கட்சியாக அதிமுக நடத்திக் கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டவர்கள், தற்போது ஒன்று சேர்ந்து இருக்கின்றனர். அவர்களில் ஒரு அமைச்சர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பற்றி பேசியுள்ளார். இதில் இருந்தே அவர்கள் எவ்வளவு முரண்பாடானவர்கள் என்பது தெரிகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் என்பது போராட்டம் நடத்தக்கூடாது. மக்களை அச்சுறுத்த வேண்டும். போராளிகளை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது. அதில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. இன்று, யார் வாயை திறந்தாலும் கைது செய்யப்படுகிறார்கள். சர்வாதிகாரி போல இந்த அரசு நடந்து வருகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இரண்டும் போய்விட்டால், இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தீவிரவாத அமைப்புகளும் காணாமல் போய்விடும். இவ்வாறு கனிமொழி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.